சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்து சென்ற அடுத்த சில வாரங்களில் இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான வேலையை தீவிர படுத்தி வருகிறது பாஜக.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக அதிக தொகுதியில் போட்டியிடுவதா.? குறைந்த தொகுதியில் போட்டியிடுவதா.? என்பது இல்லாமல் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளே செல்ல வேண்டும். இதுதான் மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக தமிழக தலைமைக்கு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜகவுக்கு சாதகமாக இருக்கக்கூடிய தொகுதிகளை பட்டியலிட்டு டெல்லி தலைமைக்கு அனுப்ப தமிழக பாஜக தலைமைக்கு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் முதல் கட்டமாக சுமார் தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு சாதகமான 50 தொகுதிகளை பாஜக தலைமை பட்டியலிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகிறது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இரண்டாம் இடம் பிடித்த நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், குறிப்பாக பாஜகவில் வலுவாக இருக்கக்கூடிய வகையில் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாஜக வளர்ச்சி கண்டுள்ளது.
அந்த வகையில் தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலம் ஆகிய இரண்டு மண்டலில் மட்டுமே சுமார் 30 சட்டமன்றத் தொகுதிகளை பாஜக வெற்றி வாய்ப்புக்கான தொகுதியாக தன்னுடைய பட்டியலில் பாஜக தலைமை சேர்த்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று டெல்டா, மத்திய மண்டலம் சென்னை ஆகிய பகுதிகளில் தற்போது 20 தொகுதிகளை பாஜக பட்டியலிட்டு இருக்கிறது.
அந்த வகையில் முதல் கட்டமாக தற்பொழுது பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 50 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயார் செய்திருக்கிறது பாஜக தலைமை என கூறப்படுகிறது. அதாவது மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 80 தொகுதிகளை பாஜக பட்டியலிட்டு அதில் வெற்றி வாய்ப்பு உள்ள சுமார் 50 தொகுதிகளை அடையாளம் கண்டு அந்தந்த தொகுதிகள் யார் போட்டியிடுவது என்கின்ற வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்யும் பணியில் தற்போது பாஜக ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது முதல் கட்டமாக 50 தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பதில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று நபர்களை தற்போது பாஜக தலைமை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், அந்த மூன்று நபர்களில் ஒருவரை பாஜக தலைமை இறுதி செய்யும் என்றும், அடுத்த ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்குள் வேட்பாளர் முடிவடைந்து சம்பந்தப்பட்ட அந்த வேட்பாளர்களுக்கு உடனே அவர்கள் போட்டியிடும் தொகுதியில் தேர்தல் பணியை தொடங்குவதற்காக உத்தரவு பாஜக தலைமையிடம் இருந்து வர இருப்பதாக தகவல் வெளியாகிறது.
குறிப்பாக பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளரை சுமார் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்ய வேண்டும் என்பதில் பாஜக தலைமை மிக தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைமை தயார் செய்துள்ள 80 தொகுதிகள் ,மற்றும் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் டெல்லி தலைமைக்கு செல்ல இருக்கிறது. இதனை தொடர்ந்து டெல்லி தலைமை தேர்தல் கருத்து கணிப்பு எடுக்கும் தனியார் ஏஜெண்சி மூலம், அதில் பாஜகவுக்கு சாதகமான தொகுதிகள் எது என்பதை இறுதி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் தமிழக எல்லையோர தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளில், அங்கே எந்த சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கிறதோ அந்த சமூகம் சார்ந்த வேட்பாளருக்கு போட்டியிட சீட் வழங்க பாஜக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
