தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு விவகாரம் தற்போது ஆளுநர் மாளிகை வரை சென்றுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக, அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று முக்கிய எதிர்க்கட்சிகளும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
குறிப்பாக, குதிரைப் பேரம், சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி மாற வைக்க பேரம் பேசியது மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயக விரோத நடவடிக்கைகள் நடைபெற்றதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர், முதலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியின் கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து விரிவான மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆசை வார்த்தைகள், பணம் பரிமாற்றங்கள் மற்றும் மிரட்டல்கள் மூலமாக தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்க்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் மௌனம் காக்காமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 167-வது பிரிவின் கீழ் மாநில அரசிடம் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதே விவகாரத்தில், திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி தலைமையிலான குழுவும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் தனித்தனியாக ஆளுநரைச் சந்தித்து தங்களது புகார்களை அளித்துள்ளனர். இதற்கிடையில், அதிமுகவைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும் அடுத்தடுத்து கட்சி மாறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய ஆறு எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது இந்த விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
இந்தச் சூழலில்தான், டெல்லிக்கு அவசரப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை திரும்பியதும் இந்த விவகாரத்தில் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் இருந்தபோது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களை அவர் சந்தித்துப் பேசியதாகவும், எதிர்க்கட்சிகள் அளித்துள்ள புகார்களின் சட்டரீதியான அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 167-வது பிரிவின் கீழ், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்க ஆளுநர் முடிவு செய்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்புச் சட்டத்தின் 167-வது பிரிவின்படி, மாநில அரசின் நிர்வாகம், அமைச்சரவை முடிவுகள் மற்றும் முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் நேரடியாக தகவல்களையும் விளக்கங்களையும் கேட்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.அந்த அதிகாரத்தையே பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசிடம் விரிவான விளக்கம் கோரி ஆளுநர் விரைவில் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

