கடந்த மே மாத இறுதியில், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஏ. அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறையின் இயக்குநராக பொறுப்பேற்றார். மாநிலத்தின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான இந்தத் துறையின் பொறுப்பை அவர் ஏற்ற சில நாட்களிலேயே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த ஒரு வழக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
ஏ. அருண், சென்னை காவல் ஆணையராக இருந்தபோது பிறப்பித்திருந்த குண்டாஸ் தடுப்புக் காவல் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிமன்றம் பதிவு செய்த கருத்துகள் மிகவும் கடுமையானவையாக இருந்தன.

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்றால் என்ன… பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது என்றால் என்ன… இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணராமல் குண்டாஸ் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 28 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரியிடம் இருந்து இப்படிப்பட்ட நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர்கள் வெளிப்படையாகக் கூறினர்.
அதோடு, யூடியூபர் சவுக்கு சங்கர், வாராகி உள்ளிட்ட பலர் மீது ஏ. அருண் காவல் ஆணையராக இருந்தபோது போடப்பட்ட குண்டாஸ் வழக்குகள் பின்னர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையும் நீதிபதிகள் நினைவூட்டினர்.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை என்பது சாதாரண காவல்துறை பிரிவு அல்ல. அரசியல் செல்வாக்கோ, அதிகார அழுத்தமோ இல்லாமல் செயல்பட வேண்டிய மிக முக்கியமான அமைப்பு. அந்தத் துறையின் தலைவராக இருப்பவர் மீது சிறிய சந்தேகம் கூட வரக்கூடாது என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது உத்தரவில் மிகத் தெளிவாக பதிவு செய்தார்.
சி.வி. நரசிம்மன், சி.எல். ராமகிருஷ்ணன் போன்ற நேர்மையான அதிகாரிகள் அலங்கரித்த இந்தப் பதவியின் மதிப்பை காப்பாற்ற வேண்டியது அவசியம் என்றும், “சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்” என்ற பழமொழியையே குறிப்பிட்டு, அந்தப் பதவியின் உயர்வை நீதிமன்றம் நினைவூட்டியது.
இதோடு மட்டுமல்லாமல், நீதிமன்ற உத்தரவு நகலை கொண்டு சென்ற நீதிமன்ற ஊழியரை நீண்ட நேரம் ஏ. அருண் காத்திருக்க வைத்த சம்பவமும் நீதிமன்றத்தின் அதிருப்தியை மேலும் அதிகரித்தது. அந்த விவகாரத்திலும் ஏ. அருண் மீது நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது.
இப்படி பலவேறு சர்ச்சைகளில் சிக்கிய அருண் ஐபிஎஸ் வகித்து வந்த லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையின் நம்பகத்தன்மையையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்கும் வகையில், புதிய தலைவராக ஐஜி சி. மகேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இனிமேல் தான் ஆட்டம் இருக்கு, தற்பொழுது பொறுப்பேற்று இருக்கும் ஐஜி சி. மகேஸ்வரி ஐபிஎஸ் அவர்களின் நடவடிக்கைகளில் இருந்து முன்னாள் திமுக அமைச்சர்கள் முதல், முதல் குடும்பம் வரை இனி ஒருவரும் தப்பிக்க முடியாது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

