ஆரிய புகுத்தலை திராவிடத்தால் தடுத்துக் கொண்டு இருப்பவர்கள் நாங்கள்.! பிரதமர் பேச்சுக்கு முக ஸ்டாலின் பதில்.!

0
Follow on Google News

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசுகையில், சமீபத்தில் கோவையில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், தான் ஒரு பிரதமர் என்பதை மறந்து தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனத்தை திமுக மீது செய்துள்ளார். திமுக ஆட்சியில் இருந்தபோது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகம் கட்டவிழ்த்துவிடப் பட்டது எனவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள்தான் என்றும் சொல்லி இருக்கிறார் மோடி. எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு அவர் அப்படி பேசினார்?

பாஜகவினர் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்திய வன்முறைகளை நான் சொல்லவா? அதற்கு ஒரு நாள் முழுக்க வேண்டும். பழனிசாமி உத்தமர் என்றும், பன்னீர்செல்வம் புனிதர் என்றும் நரேந்திரமோடி சொல்லிக் கொள்ளட்டும். எனக்கு ஆட்சேபணை இல்லை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பிரதமர் பற்றிய தரம்தான் தாழும். அது பற்றி அவர் தான் கவலைப்பட வேண்டும். அரசியல் ரீதியாக திமுகவை மோடி விமர்சனம் செய்யட்டும்.அதற்கு பதில் தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

அவர் ஆரியத்தை புகுத்த நினைப்பவர். நாங்கள் அதனை திராவிடத்தால் தடுத்துக் கொண்டு இருப்பவர்கள். இந்த மோதல் என்பது காலம் காலமாக நடந்து வரும் மோதல்தான். அதற்காக திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் மோடி பேசுவது, அதுவும் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு பேசுவது கண்டிக்கத்தக்கது. சமீப காலமாக தமிழகம் மற்றும் புதுவை மாநில பாஜகவில் சேரும் சிலரது குற்றப் பின்னணி குறித்து நான் விரிவாக நேற்றைய தினம் பேசி இருக்கிறேன்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு செக்‌ஷன்களில் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேருவதையும் அவர்கள் பெயர்களையும் சொன்னேன். அவர்கள் பெயரை மீண்டும் சொல்லி அவர்களது மார்க்கெட் ரேட்டை உயர்த்த நான் விரும்பவில்லை. இத்தகைய நபர்களை கமலாலயத்தில் மாலை போட்டு வரவேற்றுக் கொண்டு இருக்கும் போது, திமுகவை குறை சொல்வதற்கு மோடிக்கு என்ன உரிமை இருக்கிறது? இவர்கள் எல்லாம் யார் என்று விசாரியுங்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விசாரிக்கச் சொல்லுங்கள். வாய்க்கு வந்த வார்த்தைகளை திமுக மீது பாய்ச்ச வேண்டாம்.

ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான உரிமையை திமுக முற்றிலுமாக இழந்துவிட்டது என்று ஏதோ கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் திமுக பலம் இழந்துவிட்டது என்று சொல்லி இருக்கிறார் மோடி அவர்கள். பிரதமர் மோடி அவர்களே! தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உங்களுக்கு மறந்துவிட்டதா? என முக ஸ்டாலின் பேசினார்.