கரூர் சம்பவத்தை தொடர்ந்து , தற்போது தவெக கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்யும் படலமும் துவங்கியிருக்கிறது. கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தகைள் 18 பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தோருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
இந்தத் தொகை இத்தனை பெரிய இழப்புக்கு ஈடு இல்லை என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் பாதிக்கப்பட்ட என் சொந்தங்களுக்கு இதை செய்வது என் கடமை என்றும் அவர் அப்போது கூறியிருந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்காமல் தவெக கட்சியினர் உள்ளூர் தலைவர்கள் காணாமல் போன சம்பவம் உள்ளூர் மக்களிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.

இதில் பலர் பயந்து போய் மொபைல் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வாட்சப் குழுவை விட்டு வெளியேறி தப்பி ஓடி உள்ளனர் என்று கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பயந்து ஓடுபவர்களால் கட்சியின் எதிர்கால நிலை குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன. கரூர் மாவட்ட தவெக அலுவலகம் சனிக்கிழமை இரவே பூட்டப்பட்ட நிலையில் மாவட்ட செயலாளர் வி பி மதியழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை.
மதியழகனின் மனைவி இந்த நெரிசலில் சம்பவத்தில் சிக்கி காயமடைந்தார் என்றும் கூறப்படுகிறது. இதில் தவெக கட்சியினர் சிலர் போலீஸ் வழக்குகளுக்கு பயந்து திமுக ஆதரவாளர்களின் கோபத்தையும் எதிர்கொள்ளும் பயம் காரணமாக கட்சித் தலைவர்கள் தலைமறைவாகி விட்டனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இன்று கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகனை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயை பார்க்கும் ஆர்வத்தில் அந்த கூட்டத்தில் வந்து நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் மற்றும் காயமடைந்த குடும்பத்தினர் பலரும் நடிகர் விஜயின் மீதும் தவெக கட்சி மீதும் மிகவும் கோபமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்களை பார்க்க வந்த மக்கள் மருத்துவமனையில் இருக்கும் போது நீங்களும் அல்லது இரண்டாம் கட்ட தலைவர்களோ அல்லது மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும் யாருமே மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவில்லை.
ஆனால் திமுக அதிமுக நாம் தமிழர் கட்சி பாஜக என அனைத்துக் கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால் விஜய் சென்னை சென்று பனையூரில் உள்ள வீட்டில் பதுங்கிக் கொண்டார் என்று பல கேள்விகள் பொதுமக்களிடம் எழுந்துள்ளன. இதற்கு கட்சித் தலைவர் விஜய் பதில் சொல்வாரா? இதற்கு பொறுப்பு யார்? உங்களது மனிதாபிமானம் இதுதானா? ஒரு பிரச்சனை என்றால் உடனே ஓடி விடுவதால் சரியாகி விடுமா என்று பல கேள்விக் கணைகள் நடிகர் விஜயை நோக்கி எழுந்துள்ளன.
இந்நிலையில் இன்று மாலை நடிகர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர் பாதிக்கப்பட்ட மக்களை நான் அங்கு வந்து சந்தித்து இருந்தால் அந்த சூழலில் மேலும் பதட்டம் ஏற்பட்டிருக்கும். இன்னும் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்திருக்கலாம். அதன் காரணமாகவே நான் கரூரில் இருந்து சென்னைக்கு வந்து விட்டேன். பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன் என்று அந்த வீடியோவில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.

