பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி வழக்கில், தற்போது பரபரப்பை ஏற்படுத்தும் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக நிர்வாகி சிக்கி அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல் வெளியாகி வருகிறது. இந்த வழக்கின் பின்னனியில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் தர்ம சாசன நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறியும்,
போலி ஆவணங்கள் மூலமும் வெறும் 2 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல் வெளியானதுமே மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. முதலில் தமிழக போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி, விசாரணையை பல்வேறு கோணங்களில் தீவிரப்படுத்தியுள்ளது.

முதல் கட்டமாக, பழனி கோயில் தேவஸ்தான தலைமை அலுவலகம், சர்ச்சைக்குரிய நிலப்பகுதி மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு புதிய எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டு, விசாரணை வேகம் பிடித்தது. அடுத்த நாளே கோயில் அதிகாரிகள் மற்றும் முக்கிய அலுவலர்கள் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல், ஐந்து அதிகாரிகள் கொண்ட தனிப்படை பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று, இந்தப் பத்திரப்பதிவு தொடர்பான முக்கிய அசல் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை கைப்பற்றிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், மீதமிருந்த அதிகாரிகள் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக, கடந்த ஜூலை 6-ஆம் தேதி தற்காலிகப் பொறுப்பு சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் இந்தப் பதிவை மேற்கொண்டபோது அலுவலகத்திற்கு வந்தவர்கள் யார், அவர்களுடன் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிய சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, ஜஸ்டின் மணிகண்டனின் வீட்டிலும் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் சேதுபதியைத் தேடும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கில் மிகப்பெரிய திருப்பமாக, நிலப் பரிமாற்ற ஆவணத்தில் சாட்சியாக திமுக நிர்வாகி ஒருவர் கையொப்பமிட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சேதுபதியின் வீடு மட்டுமல்லாமல், திமுக 27-வது வார்டு செயலாளர் லட்சுமணன் வீட்டிலும் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் திண்டுக்கல், பழனி, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கைகள், இந்த வழக்கின் தீவிரத்தையும் அதன் பின்னணியில் இருக்கும் வலையமைப்பையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தமிழக வெற்றிக்கழக அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த திமுகவின் நிர்வாகி பெயரே தற்போது இந்த வழக்கில் இடம்பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள தகவல், அரசியல் அரங்கிலும் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

