தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய மாற்றமாக 108 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிலான அரசு இரண்டு மாதங்களை நிறைவு செய்துள்ளது. ஆனால், இந்த இரண்டு மாதங்களிலேயே தமிழக அரசியலின் கணக்குகளும், எதிர்க்கட்சிகளின் அரசியல் வியூகங்களும் முற்றிலுமாக மாறி வருகிறது.
திமுக 59 இடங்களையும், அதிமுக 41 இடங்களையும் மட்டுமே பெற்றுள்ள நிலையில், மற்ற கட்சிகளின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருப்பதால், தற்போதைய சட்டமன்ற கணக்குப்படி ஆட்சி மாற்றம் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது திமுக – அதிமுகவை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, புதிய அரசை எப்படியாவது சிக்கலில் சிக்க வைக்க முடியுமா, ஆட்சியை கவிழ்க்க முடியுமா என்ற பல்வேறு அரசியல் கணக்குகள் எதிர்க்கட்சிகள் தரப்பில் போடப்பட்டது.

ஆனால், என்ன கணக்கு போட்டாலும் கூட திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்தால்கூட ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட முடியாத சூழல் உள்ளது, அதனால்தான், ஆரம்பத்தில் இருந்த அரசியல் வேகம் தற்போது மெல்ல மாறி வருகிறது. திமுக தலைமையில் நடைபெற்ற உள்கட்சி ஆலோசனைகளில், தற்போதைக்கு ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடாமல், பொறுமையாகச் செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்குப் பின்னால் இன்னொரு முக்கிய காரணமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, தற்போது மீண்டும் தேர்தல் நடந்தால் தமிழக வெற்றி கழகம் இன்னும் அதிக இடங்களை வெல்லக்கூடும் என்ற அச்சம் எதிர்க்கட்சிகள் மத்தியில் இருப்பதால், அவசரப்பட்டு எந்த நடவடிக்கையிலும் இறங்காமல், சரியான நேரத்துக்காகக் காத்திருக்க வேண்டும் என்பதே தற்போதைய அணுகுமுறையாக எதிர்கட்சிகளிடம் உள்ளது.
அதே நேரத்தில், தமிழக அரசியலில் நேரடி மோதலைத் தொடர்வதை விட, தேசிய அரசியலில் தங்களின் பங்களிப்பை வலுப்படுத்துவது அரசியல் ரீதியாக பாதுகாப்பான பாதையாக இருக்கும் என்றும் திமுக தரப்பு யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசுடன் இணக்கமான உறவைப் பேணுவதன் மூலம், மாநில அரசியலில் ஏற்படும் அழுத்தங்களை சமாளிக்க முடியும் என்ற கணக்கும் திமுகவுக்கு உண்டு.
மற்றொரு பக்கம், தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சியை எப்படி கட்டுப்படுத்துவது என்பதுதான் தற்போது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு இல்லாத நிலையில், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவதே சிறந்த வழி என்ற முடிவுக்கு திமுக வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதனால், ஆவேசமான அரசியல் நடவடிக்கைகளைத் தவிர்த்து, ஆளும் அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கும் வியூகமே தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒட்டுமொத்தமாக 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இனி வரும் காலங்களில், திமுக தனது அரசியல் பயணத்தை எந்த திசையில் முன்னெடுக்கிறது? மத்திய அரசுடனான உறவை எப்படிப் பயன்படுத்துகிறது? தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சியை எந்த வியூகத்தின் மூலம் எதிர்கொள்கிறது? என்பதுதான் தமிழக அரசியலில் அடுத்தடுத்த மாதங்களில் அதிகம் பேசப்படும் முக்கிய விவாதமாக இருக்கும்.

