தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வரும் நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் எந்தந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெரும், ஆட்சியை பிடிக்க போவது யார் என்கிற கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது, அந்த வகையில் நடக்க இருக்கும் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்கிற கருத்து கணிப்புகளை பார்ப்போம்.
‘மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 இடங்களில், திரிணமூல் காங்கிரஸ் 155-170, பாஜக 100-115, மஜ்லிஸ் 5-6 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று கணிக்கப்பட்டாலும், இம்முறை திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களம் குறித்து இக்கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது படி, தமிழகத்தில் திமுக கூட்டணியை பின்னுக்குத் தள்ளி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் என்டிஏ 114-127 இடங்களையும், திமுக, 104 – 114 இடங்களையும், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துக்கு 6 – 12 இடங்களும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு கூறியுள்ளது.
மேலும் சி வோட்டர் யஷ்வந்த் தேஷ்முக் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தனித்து போட்டியிட்டால் விஜய் வெற்றி பெற போவது இல்லை. ரஜினிகாந்த் அரசியலில் நுழைய முற்பட்ட போது நாங்கள் நடத்திய சர்வேயில் 16, 17 சதவீத வாக்குகள் பெறுவார் என்பது தெரிந்தது. விஜய் 15, 16 சதவீதத்தை தாண்டப் போவது இல்லை. தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட விஜய் வெல்லப்போவது இல்லை.
ஒருவேளை கூட்டணி அமைத்தால் மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கும். திமுக – அதிமுக இடையே வாக்கு சதவீதம் 5 சதவீதத்திற்கும் கீழ்தான் உள்ளது. எனவே விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் முற்றிலும் வேறுபட்டதாக களம் மாறிவிடும். ஆனால், அவர் தொடர்ந்து தனித்தே போட்டியிட்டால் பிரசாந்த் கிஷோர் கதிதான் விஜய்க்கு ஏற்படும். 15 சதவீதம் வாங்கினால் கூட அவரால் வெல்ல முடியாது” என்று சி வோட்டர் யஷ்வந்த் தேஷ்முக் கூறினார்.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளாரான பிரசாந்த் கிஷோர் ஜன்சுராஜ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பீகார் சட்டமன்ற் தேர்தலில் தனித்து களம் கண்ட ஜன்சுராஜ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பிரசாந்த் கிஷோரே படுதோல்வியை சந்தித்தார். வெறும் 3.44 சதவீத வாக்குகளே பிரசாந்த் கிஷோர் பெற்றார் இதே நிலை தான் தமிழகத்தில் விஜய்க்கு ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அடுத்தடுத்து வரும் கருத்து கணிப்புகள் , NDA கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்து வரும் நிலையில், திமுகவினர் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டு இருக்கிறது, அந்த வகையில் இன்னும் வேட்பாளர் அறிவிப்பு, அடுத்தடுத்து பிரச்சாரம் என தேர்தல் களம் சூடு பிடிக்கும் போது, இன்னும் தேர்தல் களம் மாறும் என எதிர்பார்க்க படுகிறது, அந்த வகையில் தற்பொழுது வரை NDA கூட்டணிக்கு சாதகமாக தேர்தல் களம் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் ஓட்டுக்கு பணம், தேர்தல் வாக்குறுதிகள் , என அடுத்தடுத்து அரசியல் கட்சிகள் கையாளும் யுக்திகள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட இருக்கிறது என்பதை அடுத்தடுத்து வரும் கருத்து கணிப்பில் தெரிய வரும்.

