தமிழக அரசியல் களத்திற்கு விஜய்யின் வருகை தீவிரமான விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், பல கருத்துக்கணிப்புகள் குறிப்பிடத்தக்க தகவல்களை வெளியிட்டுள்ளன. சில கருத்து கணிப்புகள் விஜய் எந்த தொகுதியிலும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்று கூறினாலும், அவர் ஈர்க்கக்கூடிய வாக்குகள் ஆளும் திமுக கூட்டணிக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பது உறுதியாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் அரசியல் நுழைவு திமுகவின் வாக்கு அடிப்படையில் ஒரு குறைவு ஏற்படுத்தினால், அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகக்கு நன்மை கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. கருத்துக்கணிப்புகள் படி, திமுக கூட்டணி சுமார் 41.5 சதவீத வாக்குகளையும், அதிமுக 36.2 சதவீத வாக்குகளையும் பெறும் நிலையில், விஜய் 15 முதல் 20 சதவீதம் வரை ஆதரவைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, விஜய்யை ஆதரிப்பவர்களில் இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் அதிகம் உள்ளனர். இந்த நிலைமை, திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதனால் அதிமுகவின் வெற்றி சாத்தியம் மேலும் வலுப்பெறும் என அரசியல் பார்வையாளர்கள்கருதுகின்றனர்.
மேலும், விஜய்யின் அரசியல் நிலையை, மறைந்த விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசனின் முன்னைய அரசியல் அனுபவங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், 2006-ம் ஆண்டு விஜயகாந்தின் தேமுதிக பெற்ற வாக்குகள் பல இடங்களில் தேர்தல் முடிவுகளை பாதித்தது போல, 2021-ம் ஆண்டு கமல்ஹாசனின் கட்சியும் நகர்ப்புற வாக்குகளை சிதறடித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தற்போது விஜய் வாக்குகளை பிரிக்கும் சக்தியாகவே செயல்படுவாரா அல்லது வெற்றியை அடையக்கூடியவரா என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கியமான கேள்வியாக உள்ளது.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி இந்த சூழ்நிலையை திறமையாக பயன்படுத்தி, பாஜக, பாமக, அமமுக போன்ற கட்சிகளுடன் இணைந்த கூட்டணி, அதிமுகவிற்கு வலுவான நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் வெளிவந்த கருத்துக்கணிப்புகளின் தகவல்களின் அடிப்படையில், சென்னை மற்றும் அருகிலுள்ள நகர்ப்புற தொகுதிகளில் விஜய் இரண்டாவது இடத்தைப் பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் விஷயத்தில் மட்டும் பாஜக ஒருவிதமான மென்மையான போக்கை கடைப்பிடிப்பது பல வியூகங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, விஜய்க்கு எந்தவிதமான அரசியல் நெருக்கடியோ அல்லது கட்டாயப்படுத்தலோ டெல்லி மேலிடத்திலிருந்து வழங்கப்படவில்லை என்றும், அவர் தனது அரசியல் பாதையை தீர்மானிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் கட்டாயம் இணைய வேண்டும் என்று பாஜக எந்த இடத்திலும் அவரை வற்புறுத்தவில்லை. “விஜய் வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டாலும் பரவாயில்லை” என்ற ஒரு ‘திறந்த மனநிலை’யுடன் பாஜக தலைமை அணுகி இருக்கிறது, விஜய்யின் அரசியல் வருகை என்பது திமுகவின் வாக்கு வங்கியில் ஒரு மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தும் என்று பாஜக கணிப்பதால், அவரை தொந்தரவு செய்யாமல் ஒரு சுதந்திரமான அரசியல் தலைவராக செயல்பட விடுவதே தங்களுக்கு லாபம் என அவர்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில் 2026 தேர்தல் மூன்று முனை போட்டியாக இருந்தாலும், அதின் மையப்போட்டி திமுக மற்றும் அதிமுக இடையேயே நடைபெறும் என பார்க்கப்படுகிறது.

