கடந்த ஆண்டு டிசம்பர் 5 அன்று காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யைச் சந்தித்ததில் தொடங்கி,திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி அறிவுதலின் படியே விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசிய தகவல் முதல்வர் முக ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது முக ஸ்டாலினும் காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18ல் வென்ற காங்கிரஸ், தற்போது 50 தொகுதிகள் வேண்டும் என திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. எங்களுக்கு எம்எல்ஏ சீட் மட்டும் கிடைத்தால் போதாது. எங்களுக்கு அமைச்சரவை பதவி தேவை. ஆட்சியில் பங்கு தேவை. நீங்கள் மெஜாரிட்டி ஆட்சி அமைத்தால் அது நடக்காது. அதனால் மைனாரிட்டி இடங்களில்தான் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று திமுகவை காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழக அமைச்சரவையில் 35 பேர் திமுகவினர், வேறு கட்சிக்கு இடம் இல்லை. ஆனால் அடுத்த முறை திமுக மைனாரிட்டி இடங்களில் போட்டியிட வேண்டும் அல்லது தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட ஆட்சியில் கூட்டணியினருக்கு இடமளித்த ஆந்திரப் பிரதேச மாதிரியை திமுக இங்கே பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் பிரஷர் கொடுத்து வந்தாலும், ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை, ஆட்சியில் பங்கில்லை என உறுதியாக இருக்கிறது திமுக.
இந்த சூழலில், காங்கிரஸ் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு பிரிவினர், நடிகர் விஜய் தலைமையிலான தவெக உடன் கூட்டணி அமைப்பதே அரசியல் ரீதியாக லாபகரமானது என வாதிடுகின்றனர். தவெகவுடன் இணைந்தால், அதிக தொகுதிகளில் போட்டியிடவும், துணை முதல்வர் பதவி, அமைச்சரவை இடங்கள், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் உள்ளிட்ட அதிகாரப் பகிர்வுகளைப் பெறவும் வாய்ப்பு இருப்பதாக ராகுல் காந்தியிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் முதல் தேர்தலிலேயே சுமார் 20 சதவீத வாக்கு வங்கியைப் பெறக்கூடும் என்ற கணக்கையும் காங்கிரஸ் போட்டுள்ளது, இதற்கு மாறாக, ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி இந்திரா பவனில் நடைபெற்ற கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் செல்வப்பெருந்தகை , மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தமிழக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்,இதில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்வதா அல்லது அதிகாரப் பகிர்வுக்கு வாய்ப்புள்ள புதிய அணியைத் தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.
அப்போது ஆட்சியில் பங்கு வேண்டும், குறைந்தது 6 முக்கிய அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கைக்கு திமுக உறுதி அளித்தால் மட்டுமே கூட்டணியைத் தொடர்வோம் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு அதுவும் 6 முக்கிய அமைச்சர்கள் வேண்டும் என்கிற காங்கிரஸ் கோரிக்கையை பரிசீலனை பண்ண கூட திமுக தயாராக இல்லை, அப்படியிருக்கையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உடையவே அதிக வாய்ப்புள்ளது , ஆகையால் விஜய் உடன் காங்கிரஸ் கைகோர்க்க தயாராகி விட்டதால் இம்மாத இறுதியில் காங்கிரஸ் விஜய் உடனான கூட்டணியை உறுதி செய்யும் என எதிர்பார்க்க படுகிறது.

