அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது நடந்த முறைகேடு தொடர்பாக, கடந்த ஆண்டு செந்தில் பாலாஜி சொந்தமான இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பின்பு கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்து மனு தாக்கல் செய்து வந்தார் செந்தில் பாலாஜி.
ஆனால் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீனில் வெளியே வந்த சில நாட்களிலேயே செப்டம்பர் 29 ஆம் தேதி அவர் அமைச்சராக மீண்டும் பதவியேற்றார். எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றம் கொடுத்த கடும் நெருக்கடி காரணமாக அமைச்சர் பதவியை துறந்தார் செந்தில் பாலாஜி. இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு கோரி மூன்று மனுக்கள் விசாரணைக்கு வந்தன. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது இந்த விவகாரத்தில் ஜாமீன் வழங்கிய போது அவர் அமைச்சராக இல்லை, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டார் என்ற காரணத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை மாறாக வழக்கின் தன்மை குறித்தும் அதில் இருக்கக்கூடிய சாராம்சங்களை கருத்தில் கொண்டுதான் ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்பது வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்டப்பட்டது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது எனத் தெரிவித்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், செந்தில் பாலாஜி இந்தவழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். எந்த ஒரு சாட்சியங்களையும் ஆதாரங்களையும் அவர் கலைக்கவோ அல்லது அழுத்தம் கொடுக்க முற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஜாமீன் நிபந்தனைகளை அவர் கடைபிடித்து வருகிறார். எந்த வகையிலும் மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் தற்பொழுது இருக்கும் கேள்வி என்னவென்றால் ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது குற்றம் சாட்டப்பட்ட நபர் அமைச்சராக இருக்கக்கூடாது? என நீதிமன்றம் கூற முடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு நீதிபதிகள் தரப்பில் தனது நிலைப்பாட்டை தெளிவாக வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் எந்தவொரு மாற்றுக்கருத்தோ குழப்பமோ இருக்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தனர். செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால் அது தொடர்பாக மனுவை தாக்கல் செய்து இருக்கலாம்.
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் அதில் அனுமதி பெற்று அவர் அமைச்சராகலாம். ஆனால் அதற்கு முன் அவர் விதிகளை மீறக்கூடாது. ஜாமீன் விதிகளை மீறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், செந்தில் பாலாஜி நீதிமன்றம் உத்தரவின்றி அமைச்சராக பொறுப்பேற்க்க முடியாது என்றும், அப்படி மீறி பொறுப்பேற்றால், அவருடைய ஜாமின் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கைது செய்ய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

