கருணாநிதி திமுக தலைவராக இருந்த காலத்தில் இருந்து திமுகவில் வாரிசுகளுக்கு இடையில் நடக்கும் அரசியல் போட்டி தவிர்க்க முடியததாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு முக ஸ்டாலின் – முக அழகிரி இருவருக்கும் இடையில் நடந்த அதிகார போட்டியில், கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே, சாதுர்யமாக முக அழகிரியை திமுகவில் இருந்து ஓரம் கட்டவைத்து திமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்தார் முக ஸ்டாலின்.
கருணாநிதி உயிருடன் இருந்த போதே, முக அழகிரியை ஓரம் கட்டியது போன்று கனிமொழியை ஓரம் கட்ட முக ஸ்டாலின் எடுத்த முயற்சி தோல்வியை தழுவியது. அந்த அளவுக்கு கனிமொழி தன்னுடைய அரசியல் இருப்பை தக்க வைத்து கொண்டார். முக ஸ்டாலினை விட முக அழகிரியிடம் மிக நெருக்கமாக இருந்தவர் கனிமொழி, இருந்தும் அண்ணன்கள் இருவருடைய அரசியல் போட்டியில் எந்த பக்கம் இல்லாமல், பொதுவான நபராகவே இருந்தார் கனிமொழி.

இந்நிலையில் கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை அரசியலில் தலைகாட்டாமல் இருந்து வந்த உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி மறைவுக்கு பின்பு நடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அடுத்த மிக குறுகிய காலத்தில் இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர் என அடுத்தடுத்து அதிகாரமிக்க பதவிக்கு வந்தார்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர் என அடுத்தடுத்து உயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றாலும் கூட, கட்சியில் அவரால் இளைஞரணி செயலாளர் பதவியை தாண்டி செல்லவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவில் திமுகவின் துணை பொதுச் செயலாளர் பொறுப்புக்கு காய் நகர்த்தினார் உதயநிதி ஸ்டாலின்.
ஆனால் கனிமொழி மற்றும் திமுக மூத்த தலைவர்கள் போட்ட முட்டுக்கட்டை, மேலும் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை மீது முதல்வருக்கு இருந்த அதிருப்தி உதயநிதிக்கு கட்சியில் உயர் பதவி கொடுக்கப்படவில்லை, அதே நேரத்தில் கனிமொழியை ஓரம் கட்ட வேண்டும் என்கிற முடிவை கைவிட்ட முதல்வர் முக ஸ்டாலின், கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அறிவாலயத்தில் தனி அறை ஒதுக்கினார்.
மேலும் தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பு கனிமொழிக்கு வழங்கப்பட்டு, தென் மாவட்டத்தின் கனிமொழிக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார் முக ஸ்டாலின். அதே நேரத்தில் தற்பொழுது கனிமொழி அழகிரி பார்முலாவை கையில் எடுத்துள்ளார், பெரும்பாலும் சென்னையில் தற்பொழுது கனிமொழி இருப்பது இல்லை, தூத்துக்குடியில் முகாமிட்டு, தென்மாவட்ட அரசியலில் ஆழமாக கால் பதிக்க வேண்டும் என அழகிரி பார்முலாவை கையில் எடுத்துள்ளார் கனிமொழி என கூறப்படுகிறது.
அந்த வகையில் தென் மாவட்டத்தில் இனி முதல்வர் முக ஸ்டாலின் எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், முதல்வர் தென் மாவட்டத்தில் கலந்து கொள்ளும் அணைத்து நிகழ்விலும் கனிமொழியும் இருக்க வேண்டும் என முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடு தான், முன்பு எப்போதும் இல்லாத வகையில் தேவர் குருபூஜைக்கு வந்த முதல்வர் உடனே கனிமொழி பயணித்தது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
அந்த வகையில் தென் மாவட்டத்தில் உதயநிதியை ஓரம்கட்டும் விதமாக திமுகவில் கனிமொழி கை ஓங்கி வரும் நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், எப்படி அக்கா நமக்கு போட்டியிட சீட் பெற்று தந்து விடுவார் என்கிற மகிழ்ச்சியில் உள்ளனர், கனிமொழி ஆதரவாளர்கள்.

