நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, சுமார் ஏழு இடங்களில் டெபாசிட் இழந்த அதிமுக, 13 இடங்களில் நான்காவது இடத்திலையும், 12 இடங்களில் மூன்றாவது இடத்தையும் பெற்றது. இந்த நிலையில் தேர்தல் முடிந்ததும் இப்படியே தொடர்ந்தால் அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்கின்ற முடிவுக்கு வந்த செங்கோட்டையன் உட்பட ஆறு அதிமுக முக்கிய தலைவர்கள், தனியாக சென்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
குறிப்பாக தென் மாவட்டத்தில் அதிமுக வலுவாக இருக்கக்கூடிய இடத்தில் கூட படுதோல்வியை சந்தித்து இருக்கிறது, ஆனால் நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் – டிடிவி ஆகியோர் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார்கள். குறிப்பாக தென்மாவட்டத்தில் சில இடங்களில் நாம் டெப்பாசிட் இழந்துள்ளது மிகப் பெரிய அசிங்கம் என்றெல்லாம் எடப்பாடியிடம் எடுத்துரைத்திருக்கிறார்கள், செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி உட்பட சுமார் ஆறு அதிமுக முக்கிய தலைவர்கள்.

மேலும் டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். அப்போதுதான் வலுவிழுந்த நம்ம கட்சி வலுப்பெறும் என்றும், செங்கோட்டையன் எஸ்.பி வேலுமணி உட்பட முக்கிய ஆறு தலைவர்கள் எடப்பாடியிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் இதை நிராகரித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதனைத் தொடர்ந்து தன்னிடம் வந்து கோரிக்கை வைத்த ஆறு முக்கிய அதிமுக தலைவர்களில் ஒரு சிலரை மெல்ல மெல்ல ஓரங்கட்ட தொடங்கி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதில் ஒருவர் தான் செங்கோட்டையன் , ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியை விட நான் அரசியலில் சீனியர், மேலும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவதற்கு முன்பு தன்னுடைய பெயரை தான் முதல்வராக சசிகலா முதலில் பரிசீலனை செய்தார்.
அப்படி இருக்கும் பொழுது என்னிடமே நீ அரசியல் செய்கிறாயா என்று துணிந்த செங்கோட்டையன் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேட்டியும் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் செங்கோட்டையனின் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஒருவேளை செங்கோட்டையன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் எப்படி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக தோல்வியை சந்தித்ததோ, அதேபோன்று கொங்கு மண்டலத்திலும் இழப்பை சந்திக்க நேரிடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் செங்கோட்டையன் உடன் சேர்ந்து சென்ற அந்த ஆறு பேரில் எஸ் பி வேலுமணி , தங்கமணி, சிவி சண்முகம், கே.பி அன்பழகன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் தற்போது செங்கோட்டையன் பின்னணியில் இருந்து செயல்படுவதாகவும், குறிப்பாக இதில் எஸ் பி வேலுமணி செங்கோட்டையனுக்கு முழு ஆதரவாக பின்னணியிலிருந்து செயல்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவு எடப்பாடி இருக்காது, அப்படி நடவடிக்கை எடுத்தால் அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாஜக மேலிடமும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று விரும்புவதால் செங்கோட்டையனுக்கு பின்னணியில் பாஜகவின் முழு ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.




