மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் கடும் போர் பதற்றத்திற்கு இடையே, சவுதி அரேபியாவிலிருந்து சுமார் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் ‘ஷென்லாங் சூயல்மாக்ஸ்’ (Shenlong Suezmax) என்ற பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக இந்தியா வந்து சேர்ந்துள்ளது.
இந்த சவாலான பயணத்தை இந்தியரான கேப்டன் சுக்ஷாந்த் சிங் சந்து தலைமையிலான 29 பேர் கொண்ட குழுவினர் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர். ஈரான் கடற்படையின் கண்காணிப்பு மற்றும் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, ‘டார்க் மோட்’ (Dark Mode) எனப்படும் ரகசிய முறையை அவர்கள் கையாண்டனர்.

அதன்படி, மார்ச் 8-ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும்போது, கப்பலின் இருப்பிடத்தைக் காட்டும் ஏ.ஐ.எஸ் (Automatic Identification System) கருவி தற்காலிகமாக அணைக்கப்பட்டது. சிக்னல்கள் ஏதுமின்றி எதிரிகளின் கண்ணில் படாமல் ரகசியமாக அந்தப் பகுதியைக் கடந்த பிறகு, மார்ச் 9-ம் தேதி மீண்டும் சிக்னல்கள் இயக்கப்பட்டு பயணம் தொடரப்பட்டது.
இந்த துணிச்சலான நடவடிக்கைக்குப் பின்னால் இந்தியாவின் ராஜதந்திர நகர்வுகளும் முக்கியப் பங்கு வகித்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரான் நாட்டு அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக, இந்தியக் கப்பல்கள் செல்வதற்காக ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்துவிட ஈரான் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியான தந்திரங்கள் மற்றும் உயர்மட்ட அரசியல் பேச்சுவார்த்தைகள் என இரண்டும் இணைந்து செயல்பட்டதால், போர் பதற்றத்திற்கு மத்தியிலும் இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் பிற நாட்டு கப்பல்கள் தாக்குதலுக்குள்ளான நிலையிலும், இந்தியாவுக்குச் சொந்தமான மற்றும் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் சுமந்து வரும் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்க முடிகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும் பகுதி இப்பாதை வழியாகவே நடைபெறுவதால், இந்த இராஜதந்திர வெற்றி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது
கப்பல்கள் தங்களை மறைத்துக் கொண்டு பயணிக்கும் இந்த ‘டார்க் மோட்’ முறை, தற்போதைய பதற்றமான சூழலில் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. TankerTrackers.com போன்ற தளங்களின் தகவல்படி, ‘ஷன்லாங்’ கப்பல் மட்டுமல்லாமல், மேலும் பல கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஏஐஎஸ் சிக்னல்களைத் துண்டித்து விட்டுப் பயணிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சாகசப் பயணம், போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், கடல் வழி வர்த்தகத்தைப் பாதுகாப்பாக முன்னெடுப்பதில் உள்ள சவால்களையும், அதைச் சமாளிக்க கையாளப்படும் நுட்பங்களையும் உலகுக்கு உணர்த்தியுள்ளது. மிக ஆபத்தான ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த முதல் சரக்கு கப்பல் இதுவாகும்.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகாமல் 29 பணியாளர்களுடன் இக்கப்பல் வெற்றிகரமாக இந்தியா வந்து சேர்ந்தது. இந்த கப்பல் வந்தடைந்த போதிலும் கடல் வழி வர்த்தகத்தில் இந்தியாவிற்கான சவால்கள் இன்னும் குறையவில்லை. ஈரானின் சுரங்க அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில்,
இந்தியாவின் மேலும் 28 சரக்கு கப்பல்கள் அந்த பகுதியில் சிக்கியுள்ளன. எரிசக்தி இறக்குமதிக்கு முக்கியமான இந்த கடல் பாதை போர்க்களமாக மாறியுள்ளதால், எஞ்சிய கப்பல்களை பாதுகாப்பாக இந்தியா வரவைப்பது குறித்து இந்திய துறைமுக அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் மிக தீவிரமாக கையாண்டு வருகிறது.

