முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பு IAS மற்றும் IPS அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கிய அதிகாரிகளை காத்திருப்பு பட்டியல் அல்லது டம்மி பதவிகளுக்கு மாற்றி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விஜய் தலைமையிலான தவெக அரசு நேர்மைக்கு பெயர் போன அதிகாரிகளை முக்கிய பொறுப்புக்கு நியமித்து வருகிறது.
இதில் தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழக உளவுத்துறை ஐ ஜியாக நியமிக்கப்பட்டுள்ள அஸ்ரா கார்க் முன்னாள் முதல்வர் கருணாநிதி மகனுக்கே தண்ணி காட்டியவர் என்பதும் , அந்த வகையில் யார் அஸ்ரா கார்க் என்பதை பார்க்கலாம், அஸ்ரா கார்க் பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா நகரில் பிறந்த கார்க் மின் பொறியியல் பட்டம் பெற்றவர்.

கார்கின் தாய்மொழி பஞ்சாபி என்றாலும் அவர் தமிழகம் வந்த பிறகு திருக்குறள் படிக்கும் அளவுக்கு தமிழ் புலமையை வளர்த்துக் கொண்டவர். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, 2004ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார் அஸ்ரா கார்க்.திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய அவர், குறுகிய காலத்திலேயே தனது செயல்திறனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
2008 முதல் 2010 வரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியபோது, கந்துவட்டி கொடுமையை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது பொதுமக்களிடையே அவருக்கு பெரும் நற்பெயரை பெற்று தந்தது. 2006 முதல் 2011 வரையிலான கால கட்டம். மதுரை மு.க.அழகிரியின் கோட்டையாக இருந்த காலம். துணை முதல்வர் ஸ்டாலினே மதுரையில் ஏதாவது நிகழ்வு என்றால் தவிர்க்கும் அளவுக்கு அழகிரியின் கை ஓங்கியிருந்த காலம்.
அந்த நேரத்தில் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. தேர்தல் ஆணையத்தின் கைக்கு அதிகாரம் போனதும், மதுரையில் யாரை போட்டால் தேர்தலை அமைதியாக நடத்தலாம் என்று யோசித்தவர்கள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டனர்.
அஸ்ரா கார்க் அதிரடிக்கு முன்னால் மு.க.அழகிரியின் தேர்தல் வியூகங்கள் எல்லாம் தோற்றுப் போயின. அதற்கு முன்பு நடந்த மதுரை மேற்கு தொகுதி, திருமங்கலம் சட்டமன்ற இடைத் தேர்தலின் போது, அதிமுகவினரை ஓட ஓட விரட்டிய திமுகவினர், 2011-இல் அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது. அந்தத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக படுதோல்வியை சந்தித்தது.
அஸ்ரா கார்க் இந்தப் பணியை பாராட்டும் விதமாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தேர்தல் ஆணையம் நியமித்த இந்த அதிகாரிகளையே மதுரையில் தொடரச் செய்தார். இதனை தொடர்ந்து முக அழகிரியின் வலது கரம் என சொல்லப்பட்ட முக அழகிரி ஆதரவாளர் பொட்டு சுரேஷை கைது செய்து தரையில் அமர வைத்த பெருமை அஸ்ரா கார்க்குக்கு உண்டு.
ஆட்சி அதிகாரம் இருந்தபோது ஒரு பெண் போலீஸ் அதிகாரியை மிகக் கேவலமான வார்த்தைகளால் பொட்டு சுரேஷ் திட்டியிருந்த தகவலை அறிந்த அஸ்ரா கார்க், அதே பெண் போலீஸை வைத்து பொட்டு சுரேஷ் வழக்கை பதிவு செய்ய வைத்தார். அந்தப் பெண் அதிகாரி முன்பு தரையில் உட்கார வைக்கப்பட்டார் பொட்டு சுரேஷ். அப்படி நேர்மைக்கு பெயர் போன ஒரு துணிச்ச்சலான அதிகாரியை தான் முதல்வர் விஜய் தமிழக உளவு துறை ஐஜி யாக நியமித்து இருக்கிறார்.

