காலந்தாழ்த்தாமல் பஞ்சமி நிலங்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனே எடுத்திட வேண்டும்.. திருமா கோரிக்கை..

0
Follow on Google News

தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து பட்டியல் சமூக மக்களிடம் ஒப்படைக்க உடனே முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். முதல்வர் முக ஸ்டாலினுக்கு அவர் அனுப்பிய கோரிக்கை மனுவில் குறிப்பிட்டதாவது, இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ட்ரெமென் ஹேரே என்பவர் ஆதிதிராவிட மக்களுக்கு நிலம் வழங்கப்படவேண்டிய தேவையை வலியுறுத்தி விரிவான அறிக்கை ஒன்றை 1891ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணிக்கு அனுப்பினார். அதை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷ்
அரசு இரண்டு அரசாளைகளைப் பிறப்பித்தது.

(GO No 1010, 1010A Revenue 30th Sep 1892; GO No 68 Education 1st Feb 1893 ) அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதுமிருந்த தரிசு நிலங்களைக் கண்டறிந்து அவற்றை ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நிலங்களை ஆதிதிராவிட மக்கள் தவிர வேறு சமூகத்தவர் விலைக்கு வாங்கவோ
பயன்படுத்தவோ கூடாது எனவும் அரசாங்கம் உத்தரவிட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட நிலம் சுமார் 12 லட்சம் ஏக்கர் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நிலமே பஞ்சமி நிலம் என அழைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் கரகத்தஹல்லி கிராமத்தில் இருந்த 3.39 ஏக்கர் பஞ்சமி நிலத்தைப் பிற சமூகத்தைச் சேர்ந்த கே.பழனியப்பன் என்பவர் ஆக்கிரமித்துக்கொண்டார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அவரிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றி மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்க தருமபுரி கோட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களைப் பிறர் கைப்பற்ற உரிமையில்லை என உறுதியாகத் தெரிவித்தது.

அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசின் வருவாய்த் துறை தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் ஆணை ஒன்றை அனுப்பியது. (அரசாணை எண் ஜி- 1/4868190 நாள் 15.7.1991) அந்தந்த மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க அதில் அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் 85744.01 எக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டன. அதில் 10922.54 ஏக்கர் நிலம் பிறாது ஆக்கிரமிப்பில் இருக்கிறது என அரசு தெரிவித்தது. அதன்பின்னர் 1996 இல் அதிமுக ஆட்சி முடியப்போகும் நேரத்தில் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைப்பதற்கென அன்றைய வருவாய்த் துறை அமைச்சர் திரு எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அது தொடரமுடியவில்லை.

2011 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை எற்று அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பஞ்சமி நிலங்கள் தொடர்பாகப் பரிந்துரைகளைச் செய்வதற்கென ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு எம்.மருதமுத்து அவர்கள் தலைமையில் நிலநிர்வாக ஆணையர் மற்றும் ஓய்வுபெற்ற ஐஎஎஸ் அதிகாரிகளான திரு மணிவண்ணன், வே.கருப்பன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட ஆணையம் ஒன்றை அமைத்தார்.

அந்த ஆணையம் கேட்டபோது தமிழ்நாட்டில் பஞ்சமி நிலம் சுமார் 12 லட்சம் ஏக்கர் இருப்பதாக நில
வருவாய் ஆணையர் தகவல் கொடுத்தார். அந்த ஆணையமும் ஆட்சி மாற்றம் காரணமாகத் தனது பணியைத் தொடரமுடியவில்லை. அதன்பின்னர், 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் 12 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பஞ்சமி நிலங்களைக் கண்டறிய ஒரு உயர்நிலைக்குழுவை அமைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

அந்த ஆணையின் அடிப்படையில் 2015 அக்டோபர் 8ஆம் தேதி பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து மீட்பதற்கான வழிவகைகளைக் கண்டறிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர்திலைக்
குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து அரசாணை பிறப்பித்தது. நில நிர்வாக ஆணையரின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளரும், வருவாய்த்துறை செயலாளரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

அது 2.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளேட்டில் கடந்த 15.10.2020 அன்று செய்தி வெளியாகி உள்ளது ஆதிதிராவிட மக்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் குறித்து வருவாய் வாரியத்தின் நிலை ஆணை 15 தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. நிலையான A பதிவேட்டில் பஞ்சமி நிலங்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் காண்பதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆதிதிராவிட மக்களுக்கு ஒப்படைவு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்களை வேறு யார் வாங்கியிருந்தாலும், ஆக்கிரமித்திருந்தாலும் அது செல்லாது என்பதைப் பார்வையில் கண்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் மூன்றுமே உறுதிசெய்துள்ளன. 2008, 2010 மற்றும் 2012 ஆகிய மூன்று ஆண்டுகளில் அந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து மீட்பது தொடர்பில் தமிழக அரசு 1991 ஆம் ஆண்டே அரசாணை பிறப்பித்திருப்பதால் தனியே இப்போது புதிதாக எந்த ஆணையும் வழங்கப்படவேண்டிய தேவை இல்லை.

மேலே கண்ட உண்மைகளைக் கருத்தில்கொண்டு 1991 இல் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையிலும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளின் வழிகாட்டுதலிலும் தமிழ்நாட்டில் இருக்கும் பஞ்சமி நிலங்களின் விவரங்களை சேகரிப்பதற்கும் அவற்றை ஆதிதிராவிட மக்களிடம் ஒப்படைப்பதற்கும் 2015 இல் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை வலுப்படுத்தி, அதற்குக் காலவரையறை நிர்ணயம் செய்து பஞ்சமி நிலங்களைக் கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், தற்போது உயர்நிலைக்குழுவால் கண்டறியப்பட்டுள்ள சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மேலும் காலந்தாழ்த்தாமல் ஆதிதிராவிட மக்களுக்குப் பகிர்ந்தளிக்க உரிய நடவடிக்கைகளை உடனே எடுத்திடவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.