வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அடுத்த நாராயணபுரம் பகுதியில் சேர்ந்தவர் கலாவதி காஷ்மீரில் CRPF காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24.07.2025 அன்று நாராயணபுரத்தில் வசித்து வந்த அவருடைய தந்தை குமாரசாமி அன்று அதிகாலை தனது விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்று விட்டு மாலை வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து குமாரசாமி பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் CRPF ல் பணியாற்றி வரும் காவலர் கலாவதி நாட்டின் எல்லையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எங்கள் வீட்டில் எங்கள் அப்பா விவசாய நிலத்திற்கு சென்ற போது யாரோ வீட்டை உடைத்து எனது திருமணத்திற்காக வைத்திருந்த 22 சவரன் நகைகள், பட்டு புடவை, மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அப்போது யாரும் இல்லை எனக் கூறி விட்டார்கள் தாமதமாகவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்தார்கள். ஆனால் இதுவரை நகையை கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை என தெரிவித்த CRPF கலாவதி.
மேலும் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனது திருமணத்திற்காக வாங்கி வைத்த நகைகள் போய்விட்டது எனக்கு யாருமே உதவவில்லை என சீருடையில் அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை.
ஜம்மு-காஷ்மீரில் நமது நாட்டின் எல்லைகளில் மரியாதையுடன் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிஆர்பிஎஃப் ஜவான், இந்த ஆண்டு ஜூன் மாதம் காட்பாடி அருகே தனது வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் காவல்துறையின் நடவடிக்கையின்மை குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என தெரிவித்துள்ள அண்ணாமலை.
மேலும் சீருடையில் இருக்கும் ஒரு பெண்ணை தோளில் தேசக் கொடியை ஏந்தியபடி ஆன்லைனில் நீதிக்காக கெஞ்ச வைக்கும் அளவுக்கு எந்த வகையான நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது? என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, எள்ளலும், இது வெறும் சட்டமீறல் மட்டுமல்ல, குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் திமுகவின் ஆட்சியில், நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடுகிறார்கள். எழுந்திருங்கள் திரு. மு.க.ஸ்டாலின் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

