தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசாக களத்தில் குதித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா. இப்போது பீனிக்ஸ் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரை 17 வயது சிறுவன் ஒருவன் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டி கொலை செய்கிறான். போலீசார் அவனை கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைகிறார்கள். கொலை செய்யப்பட்ட அந்த எம்எல்ஏவின் குடும்பமும், அந்த கட்சியும் அந்த சிறுவனை எப்படியாவது கொன்று விட வேண்டும், பழி தீர்க்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
அதற்கு அவர்கள் செய்யும் முயற்சியும் சிறுவன் அந்த எம்எல்ஏ வை ஏன் கொலை செய்தான் என்பதற்கான காரணமுமே பீனிக்ஸ் படத்தில் கதைக்களமாக உள்ளது. இந்த படத்தில் அறிமுக நாயகனாக சூர்யா நல்ல நடிப்பை தந்திருக்கிறார். முதல் பாதியில் சண்டைக் காட்சிகள் மட்டுமே அவரது முக்கிய வேலையாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் அவரது கேரக்டரை நன்றாக செய்திருக்கிறார் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். முதல் பாதியில் சில இடங்களில் ஹீரோவுக்கான பில்டப் சற்று தூக்கலாக இருக்கிறது.

முன்பின் தெரியாத இந்த ஹீரோவுக்கு இவ்வளவு பில்டப் தேவையில்லை என்றும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தோன்றுகிறது. ஆனால் முதல் பாதியில் சரியாக ஒட்டாத சில காட்சிகள் நாயகனின் கதை புரிந்த பிறகு 2ம் பாதியில் வரும் சண்டை காட்சிகள் பெரிய அளவில் ரசிக்க வைக்கின்றன. இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் அனல் அரசு முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார்.
வழக்கம்போல தமிழ் சினிமாவில் இதுவும் ஒரு பழிவாங்கும் சாதாரண கதை தான். புதிய கரு, வித்யாசமான திரைக்கதை அமைப்பு என இல்லாவிட்டாலும் தொய்வு இல்லாமல் முதல் படத்தில் காட்சிகளை அமைத்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்திருக்கிறார். முதல் பாதியில் பெரிய தாக்கமும் எதிர்பார்ப்பும் ஏற்படாவிட்டாலும், இரண்டாம் பாதியில் படம் விறுவிறுப்பாக செல்கிறது. காட்சிகள் உருவாக்கத்திலும் நினைத்ததை திரையில் கொண்டு வந்த சாமர்த்தியத்திலும் இயக்குனர் ஜெயித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
படத்தின் முதல் பாதியில் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க போலீசார் திணறுவது போல் காட்டுகின்றனர். ஆனால் இரண்டாம் பாதியில் சொல்லப்பட்ட கதையை வைத்து பார்த்தால், இதை எளிதாக கண்டுபிடித்து இருக்கலாமே என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுகிறது. படத்தில் கமர்சியல் காரணத்திற்காக சில விஷயங்களை கொண்டு வராமல் தடுத்து இருந்தால் படம் இன்னும் வேகமாக போயிருக்கும். ஸ்டண்ட் மாஸ்டர் இயக்கிய படம் என்பதால் படத்தில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளில் அனல் தெறிக்கிறது.
அம்மாவாக தேவதர்ஷினி நடிப்பு ரசிகர்களை வெகு சீக்கிரமாக படத்துடன் ஒன்றிவிடச் செய்கிறது. வழக்கமான அம்மாவாக இல்லாமல் அவரது நடிப்பு சிறப்பாக அழுத்தமாக உள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லி கேரக்டரில் அசத்தியிருக்கிறார். ஆடுகளம் நரேன் சம்பத்ராஜ் போன்ற கேரக்டர்கள் படத்தில் அதிக நேரம் வரவில்லை என்றாலும் கொடுத்த கேரக்டரை நன்றாக செய்திருக்கின்றனர்.
படத்துக்கு சாம் சிஎஸ் இசை அமைத்திருக்கிறார். படத்தில் இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் நன்றாக இருந்தாலும் மனதில் நிற்கவில்லை. ஆனால் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. முதல் படத்திலேயே கமர்சியல் ஆக்சன் என தேவையான விஷயங்களை கொடுத்து இயக்குனராக அனல் அரசு ஜெயித்திருக்கிறார். நாயகனாக அறிமுகமான சூர்யாவுக்கும் இது நல்ல துவக்கம்தான். ஆனால் சமூக வலைதளங்களில் அடிக்கடி எழும் விமர்சனங்களை கடந்து இனிமேல் மிகவும் கவனமாக இருந்தால் பீனிக்ஸ் நாயகன் சூர்யாவும் ஒரு நல்ல ஹீரோவாக எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் ஜொலிக்க வாய்ப்புள்ளதாகவே படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.