அதிமுக பல துண்டுகளாக உடைந்து, இன்று கொங்கு மண்டலதிற்குள் சுருங்கி விட்டது என்று சொல்லும் அளவுக்கு தென் மாவட்டத்தில் மதுரை தவிர்த்து மதுரைக்கு கீழே அதிமுக என்கிற கட்சியை பூத கண்ணாடி போட்டு தேட வேண்டிய ஒரு சூழல் தான் உள்ளது. இதற்கு மிக பெரிய உதாரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு படு தோல்வி அடைந்ததே சாட்சி.
அதே போன்று டெல்டா, சென்னை மற்றும் மத்திய மண்டலத்தில் அதிமுக அட்ரசே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வடமாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓரளவு செல்வாக்கு அதிமுகவுக்கு உள்ளது. இப்படி ஒரு சுழலில் ஏற்கனவே தனக்கு ராஜசபா சீட் கிடைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் தான் சமீப காலமாக எந்த ஒரு அதிமுக நிகழ்விலும் தென்பட வில்லை என கூறப்படுகிறது.

தற்பொழுது மதுரையில் அதிமுகவின் முக்கிய புள்ளியாக இருக்க கூடிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. செல்லூர் ராஜு மாவட்ட செயலாளராக இருக்கும் மாவட்டத்தில் அவருக்கு போட்டியாக டாக்டர் சரவணன் வளர்ந்து வருவது செல்லூர் ராஜுவுக்கு துளியளவும் பிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை என்றதும், அதிமுகவை சேர்ந்த பலரும் தங்களுக்கு சீட் வேண்டாம் என ஒதுங்கி கொண்டனர். அதாவது கட்சி பாராளுமன்ற தேர்தல் செலவுக்கு பணம் தராது, உங்கள் சொந்த பணத்தை தான் செலவு செய்ய வேண்டும் என்றதும் தோல்வி அடைவதற்கு எதற்கு வெட்டியா செலவு செய்ய வேண்டும் என பலரும் ஒதுக்கி கொண்டனர்.
ஆனால் மதுரை டாக்டர் சரவணன் மதுரை பாராளுமன்ற தொகுதியில் சீட் பெற்று தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்தார். இருந்தாலும் அதிமுக சீனியர் தலைவரான செல்லூர் ராஜுவிடம் இருந்து டாக்டர் சரவணனுக்கு போதிய ஒத்துழைப்பு இல்லை என கூறப்படுகிறது. சரவணன் அதிக வாக்குகளை பெற்று விட கூடாது என்பதற்காக, டாக்டர் சரவணனுக்கு எதிராக தன்னுடைய ஆதரவாளர்களை செல்லூர் ராஜு வேலை செய்ய சொன்னதாக தகவல் பரவியது.
இதுவே அதிமுக வேட்பாளர் சரவணன் மூன்றாவது இடத்திற்கு தள்ளுவதற்கு ஒரு காரணம் என்கிறது மதுரை அரசியல் வட்டாரங்கள்.இந்த தகவல் அனைத்துமே எடப்பாடி கவனத்துக்கு சென்றதும் எடப்பாடி மற்றும் செல்லூர் ராஜு இருவருக்கும் இடையில் தொடர்ந்து உரசல் இருந்து வந்திருக்கிறது. மேலும் செல்லூர் ராஜூவை ஓரம் கட்டிவிட்டு டாக்டர் சரவணனை மாவட்ட செயலாளராக கொண்டு வருவதற்கான திட்டமும் எடப்பாடியிடம் உண்டு என கூறப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் செல்லூர் ராஜு , திமுகவிடம் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், குறிப்பாக திமுக உடன் செல்லூர் ராஜு மிக நெருக்கமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக பக்கம் செல்லூர் ராஜு செல்ல கூட வாய்ப்புள்ளது என்றும், திமுக வேட்பாளராக மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜு போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்கிற வழக்கு நிலுவையில் உள்ளதால், அதிமுக இரட்டை தலைமையின் கீழ் தான் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வந்தால், ஒ.பன்னீர் செல்வம் மீண்டும் அதிமுக உள்ளே வந்து விடுவார் அப்படி வந்து விட்டால் ஒ. பன்னீர் செல்வம் அணிக்கு சென்று விடலாம் என்கிற திட்டத்துடன் செல்லூர் ராஜு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.