கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் களத்தில் தீவிரமாக பயணித்து வரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் திடீரென இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் லிங்குசாமி ஆகியோரை சந்தித்து பேசியதாக வெளியான தகவல் கோலிவுட் வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறி உள்ளது. 4 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் விஜயின் எதிர்கால திட்டங்கள் குறித்த பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
அவர் மீண்டும் சினிமாவுக்கு திரும்புவாரா அல்லது தனது அரசியல் கட்சிக்கு திரையுலகினர் மத்தியில் ஆதரவு திரட்டுகிறாரா என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன. சினிமாவில் இருந்து அரசியல் கட்சிகள் துவங்கி தலைவர்களாக மாறியவர்கள் பலர் இருக்கின்றனர். இருந்தாலும் நடிகர் விஜயின் நிலை சற்று வித்தியாசமானது. அவர் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த பிறகு நடிப்புக்கு குட் பை சொல்லி விடுவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

இந்த சூழலில் இயக்குனர் ஷங்கர் மற்றும் இயக்குனர் லிங்குசாமியுடன் விஜய் திடீர் சந்திப்பு ஒருவேளை அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டாரா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.இந்த இரண்டு இயக்குனர்களும் விஜயை சந்தித்து பேசியது அவருக்கு ஒரு புதிய கதைக்களம் அமைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது வெறும் யூகங்களாக மட்டுமே இருக்கிறது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல.
இந்த சந்திப்பின் மூலம் நடிகர் விஜய் தனது கட்சிக்கு திரையுலகினரிடம் ஆதரவு திரட்டுகிறாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. நடிகர்கள் விஜயகாந்த் கமல்ஹாசன் அரசியல் கட்சிகளை தொடங்கிய போது எந்த பெரிய நட்சத்திரங்களும் இருவருக்குமே ஆதரவு தெரிவிக்கவில்லை. கேப்டன் விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய போது அவருக்கு திரையுலகில் இருந்து பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை.
ஒரு சில சின்ன நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது அவருக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தவர்கள் மிகவும் குறைவு. திரையுலகை சேர்ந்த பலர் அவரை ஆதரிப்பதாக மறைமுகமாக பேசினாலும் வெளிப்படையாக களத்தில் இறங்கி ஆதரவு அளிக்கவில்லை. இந்த வரலாறு விஜய்க்கு சாதகமாக அமையுமா என்பது பெரும் கேள்விக்குறி.
தமிழ் திரையுலகில் பலர் திமுக மற்றும் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். மேலும் ஒரு சிலர் தங்கள் தொழிலுக்கு சிக்கல் ஏற்படும் என்று வெளிப்படையாக அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க தயங்குகின்றனர். நடிகர் விஜயின் அரசியல் பயணம் ஒருவேளை இந்த இரண்டு கட்சிகளுக்கும் நேரடியான சவாலாக மாறினால் திரையுலகினர் அவருக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்க தயங்குவார்கள். விஜய்யின் இந்த சந்திப்புகள் அவர் தனது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய முடிவை எடுக்க உள்ளார் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
அவர் மீண்டும் சினிமாவுக்கு திரும்புவாரா அல்லது தனது கட்சிக்கு தமிழ் திரையுலகின் ஆதரவை திரட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்த சந்திப்பு விஜயின் எதிர்காலத்தைப் பற்றி யூகங்களை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் கரூரில் நடந்த சம்பவம் விஜய்க்கு நெகடிவ் பாசிடிவ் என 2 விதமான தாக்கங்களை தந்துள்ளது.

