டான் பிக்சர்ஸ் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் ஆகிய 3 நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம் இட்லி கடை. நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து அவரே இயக்கிய படம்தான் இது. ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய 3 படங்களுக்கு பிறகு இயக்குனர் தனுஷ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய 4வது படம் இட்லி கடை.
வழக்கமான ஆக்சன் கதைக்களத்தில் இருந்து மாறுபட்டு சென்டிமென்ட் எமோஷனல் கதையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தனுஷ். குறிப்பாக இந்த முறை அப்பா மகன் பாசத்தை கையில் எடுத்திருக்கிறார். தனுஷின் தந்தையாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார்.

இட்லி கடை படம் 6 மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக தயார் நிலையில் இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீஸ் என அறிவித்த நிலையில் இந்த படம் 6 மாதங்கள் தள்ளிப்போய் இப்போது வெளியாகி உள்ளது. அதுவும் கரூரில் துயர சம்பவம் நடந்துள்ள இந்த நேரத்தில் வெளியாகி உள்ள இட்லி கடை படத்துக்கு முன்பதிவிலும் விறுவிறுப்பு இல்லை. இன்று முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதிலும் ரசிகர்களுக்கு பெரிய ஆர்வம் இல்லை என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இட்லி கடை படத்தின் கதை இதுதான்… தேனி அருகே ஒரு கிராமத்தில் ராஜ்கிரணுக்கு மகனாகப் பிறக்கிறார் தனுஷ். ராஜ்கிரண் அந்த ஊரிலேயே ஒரு இட்லி கடை நடத்தி வருகிறார். அந்த இட்லி கடை அந்த பகுதியில் மிகவும் பிரபலமானதாக உள்ளது. தனக்கு பிறகு தனது மகன் தனுஷ் இந்த கடையை எடுத்து நடத்த வேண்டும் என்று ராஜ்கிரன் ஆசைப்படுகிறார். ஆனால் தனுஷ் அதை விட்டுவிட்டு பாங்காங்கில் மிகப்பெரிய தொழிலதிபர் சத்யராஜ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேவுக்கும் தனுஷூக்கும் திருமணம் ஏற்பாடாகிறது. அவர்கள் திருமணம் நடக்க சில நாட்களே உள்ள நிலையில் ராஜ்கிரண் இறந்து விடுகிறார். தந்தை ராஜ்கிரண் மறைந்து விட்டதாக தகவல் கிடைத்தவுடன் மகன் தனுஷ் பாங்காங்கில் இருந்து தனது சொந்த கிராமத்துக்கு திரும்பி வருகிறார். அங்கு அவர் என்ன செய்கிறார், தனது தந்தையின் விருப்பப்படி இட்லி கடையை எடுத்து நடத்துகிறாரா? அவருக்கு வரும் எதிர்ப்புகளை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இட்லி படத்தின் கதை.
சொந்த ஊரை மறந்து வெளியூருக்கு சென்று வேலை பார்க்கும் அனைவருக்கும் இட்லி கடை படம் கனெக்ட் ஆகும் என்கின்றனர். என்னதான் வெளியூர் சென்றாலும் தங்களது சொந்த ஊரை உறவுகளை மறக்கக்கூடாது என்று தனுஷ் இந்த படத்தில் ரசிகர்களுக்கு நினைவுபடுத்தி பாடம் நடத்தி இருக்கிறார். முதல் பாதியில் இருந்து இடைவேளை வரை நிதானமாகவும் அதே சமயம் கொஞ்சம் சுவாரசியமாகவும் படம் நகர்கிறது. இடைவேளைக்கு பிறகு வரும் இரண்டாம் பாதியில் அடுத்து என்னென்ன நடக்கப் போகிறது என்ற சுவாரசியமே படத்தில் சிறிதும் இல்லை.
மேலும் படத்தில் வரும் விஎப்எக்ஸ் காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு உறுத்தலாக உள்ளது. இன்னும் அந்த காட்சிகளில் அதிக கவனம் செலுத்தி நேர்த்தியாக செய்திருக்கலாம். இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் மற்றும் எமோஷனல் காட்சிகளை ரொம்பவும் தூக்கலாக வைத்து விட்டார்களோ என்று ரசிகர்கள் கதறும் அளவுக்கு பல காட்சிகள் மிகையாக உள்ளது. ஓவர் பில்டப்பு தனுஷ் ஒடம்புக்கு ஆகாது தம்பி என்று படம் பார்த்த ரசிகர்கள் சிலர் கத்தி கமெண்ட் செய்கின்றனர். அந்தளவுக்கு சென்டிமென்டில் நெஞ்சை நக்கி விட்டார்கள் என்றால் அது மிகையல்ல.
வழக்கமான பழைய புளித்த மாவு கதை தான். ஏற்கனவே தவமாய் தவமிருந்து படத்தில் அப்பா மகன் பாசத்தை உறவின் அழுத்தமான உணர்வுகளை இயக்குனர் சேரன் அழகாக தந்து விட்டார். இப்போது தனுஷ் அந்த மாவையே எடுத்து அதுவும் புளித்து போனதை கவனிக்காமல் இட்லி சுட்டு கடை திறந்து விட்டார். கண்டிப்பாக டன் கணக்கில் நிறைய இட்லிகள் மீந்து போகும் என்பதில் சந்தேகமே இல்லை. பழைய இட்லிகளை உதிர்த்து போட்டு இட்லி உப்புமா செய்ததாக சூரியவம்சம் படத்தில் நடிகை தேவயானி ஒரு காட்சியில் சொல்வார். அதனால் தேவயானியின் அட்வைஸ்படி தனுஷ் இட்லிகளை எல்லாம் உதிர்த்து போட்டு இட்லி உப்புமா தயாரித்து வந்த விலைக்கு விற்கலாம் என்று படம் பார்த்த ரசிகர்கள் வெறுத்துப் போய் கமெண்ட் செய்கின்றனர்.

