நாடகப்பிரியா என்ற நாடக நிறுவனம் ஒன்றை பல ஆண்டுகளாக நடத்தி வரும் எஸ்வி சேகர் ஆயிரக்கணக்கான மேடை நாடகங்களை அரங்கேற்றமும் செய்திருக்கிறார். குறிப்பாக தனது பிறந்த நாள் திருமண நாள் என சிறப்பு நாட்களில் இரத்த தானம் அதிகமாக செய்திருக்கிறார். ஆரம்பத்தில் பாஜக, அதிமுக கட்சிகளில் இருந்த எஸ்வி சேகர் இப்போது எந்த கட்சியிலும் இருப்பதாக தெரியவில்லை.
தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்துக்கு பிறகு ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்து வரும் எஸ்வி சேகர் சமீபகாலமாக திமுக ஆதரவாகவும் தவெக தலைவர் விஜய்க்கு எதிராகவும் விமர்சனம் செய்து தொடர்ந்து பேசி வருகிறார். குறிப்பாக நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து அதிகமாக விமர்சிக்கும் சிலரில் நடிகர் எஸ்வி சேகரும் ஒருவராக இருக்கிறார். கரூர் சம்பவம் குறித்து எஸ்வி சேகர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்த நடிகர் எஸ்வி சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எஸ்வி சேகர் கூறியதாவது, என்னுடைய வீட்டிற்கு கடந்த மூன்று நாட்களில் ஐந்து முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. போலீசார் அக்கறையுடன் ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். அதற்காக போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளேன்.
கரூரில் 7 மணி நேரம் கடந்து விஜய் தாமதமாக வந்தது மாபெரும் தவறு. சினிமா நடிகன் பின்னால் செல்லாதீர்கள். சினிமா நடிகன் வெறும் பொம்மை. திரையில் வருவதைப் பார்த்து ஏன் நம்புகிறீர்கள்? விஜயின் மேக்கப் கரூரில் கலைந்து போய்விட்டது. இது போன்ற பிரச்னைகள் எல்லாம் வரும் என்று தெரிந்து தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் சத்தம் இல்லாமல் விலகிப் போய்விட்டார். அவர் பார்ப்பதற்கு தண்ணீர் தெளிவாக இருக்கும். உள்ளே காலை விட்டால் தான் முதலை இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.
கரூரில் 27 ஆயிரம் பேர் வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த தெரியாத விஜய் 10 கோடி மக்கள் இருக்கிற தமிழ்நாட்டை கட்டுப்படுத்தி விடுவாரா? விஜய் எனக்கு விரோதி கிடையாது. விஜய் அவரது தந்தையை மதிக்காமல் புஸ்லி ஆனந்தை மதித்ததால் வந்த கோளாறு தான் இது. கரூர் விவகாரத்தில் விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரை இன்னும் பெரிய ஆளாக்குவதற்கு இந்த அரசு முயற்சிக்காது. ரஜினிகாந்த் போன்று விஜயும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்வி சேகர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
வழக்கமாக சினிமா துறையில் இருந்து சக நடிகர் ஒருவர் அரசியலுக்கு வந்தால் மற்ற நடிகர்கள் அவருக்கு ஆதரவு தருவார்கள். அவரை பற்றி நல்ல விதமாக பேசி மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை தான் ஏற்படுத்துவார்கள். அதுதான் ஆரம்பத்தில் வழக்கமாக இருந்தது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது அவரது தைரியம் துணிச்சல் குறித்து தமிழ் சினிமாவை சார்ந்த பலரும் வெளிப்படையாகவே பாராட்டவும் செய்தனர்.
ஆனால் இப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பெரும்பாலான நடிகர்கள் விஜய்க்கு எதிரான ஒரு நிலைப்பாட்டில்தான் இருந்து வருகின்றனர். சக நடிகனுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பும் செல்வாக்கும் பார்த்து அவர்களுக்கு ஏற்படும் பொறாமையின் விளைவாக கூட இது இருக்கலாம். ஆனால் சீனியர் நடிகர் எஸ்வி சேகர் எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலாக, ரஜினியை போலவே விஜயும் அரசியலை விட்டு பின்வாங்கி விடுவார் என்று கூறியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

