சினிமா உலகில் இப்படி ஒரு நட்பு இருப்பது மிகவும் அபூர்வமாக தான் பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் முதன்முதலாக அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தின் ஹீரோவாக கமல்ஹாசன் இருந்தார். அதாவது ரஜினி சினிமாவில் அறிமுகமாகும் போதே கமல் பெரிய நட்சத்திர நடிகராக இருந்தார். பல படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு தொடர்ந்து இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் கமலும் ரஜினியும் சில படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது சில தயாரிப்பாளர்கள், ஒரு நடிகருக்கான சம்பளத்தை பிரித்து ரஜினிக்கும் கமலுக்கும் கொடுத்ததால் இனிமேல் நாம் தனித்தனியாக நடிப்போம் என கமல் அறிவுரை சொல்ல ரஜினியும் அதை ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு இருவரும் வெவ்வேறு பாதையில் பயணித்து படங்களில் நடித்தனர்.

தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து நட்சத்திர நடிகர்களாக இருவருமே உச்சங்களை தொட்டனர். சினிமாவில் போட்டி நடிகர்கள் உள்ள யாரும் நெருக்கமான நண்பர்களாக இருக்க மாட்டார்கள் ஆனால் இதில் ரஜினியும் கமலும் மட்டும் விதிவிலக்கு. போட்டியாளர்களாக சினிமாவில் இருந்தாலும் சினிமா மற்றும் சொந்த வாழ்வில் முக்கியமான விஷயங்களை இருவரும் கலந்து ஆலோசித்து வருகிறார்கள். ரஜினிக்கு எப்போது குழப்பம் ஏற்பட்டாலும் கமலை போனில் தொடர்பு கொண்டு பேசுவார்.
அதேபோல் கமல்ஹாசன் புதிதாக கட்சி துவங்கிய போது கூட ரஜினியை நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்துகளை பெற்றார். அதேபோல் சமீபத்தில் ராஜ்யசபா எம்பி ஆன போதும் கமல்ஹாசன் முதலில் தேடிவந்து வாழ்த்துகளை பெற்றது நடிகர் ரஜினிகாந்த்திடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எந்த மேடையாக இருந்தாலும் தன்னை தாழ்த்தியும் கமல்ஹாசனை உயர்த்தியும் பேசுவது ரஜினியின் வழக்கமாக உள்ளது. இதை மற்ற நடிகர்கள் யாருமே செய்ய மாட்டார்கள்.
இந்நிலையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் கமலும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்கள். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்குப் பின்னணியில் ஒரு முக்கிய கதையும் சொல்லப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு திரிஷா உள்ளிட்டோர் நடித்த படம் தக்லைஃப். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சொந்தமாக பெரிய பட்ஜெட்டில் தயாரித்தார். ஆனால் இந்த படம் பிளாப் ஆகி விட்டது.
அதனால் தக்லைஃப் படத்தை தயாரித்த வகையில் நடிகர் கமல்ஹாசனுக்கு 180 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு அது கடனாக மாறியுள்ளது. இதுகுறித்து ரஜினியிடமும் கமல் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதன்பிறகுதான் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ரஜினிகாந்த் முடிவு எடுத்திருக்கிறார். அதில் கமலும் அவரும் இணைந்து நடிக்க உள்ளனர். அதுதான் விரைவில் நடக்கப்போகிறது.
அதாவது தனது நண்பர் கமல்ஹாசனுக்கு தக்லைஃப் படம் தயாரித்த வகையில் 180 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதால், அவருக்கு உதவும் விதமாகவே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கமலுடன் இணைந்து ரஜினி நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார் என்கிற புதிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதுவரை ரஜினி – கமல் இருவரும் இணைந்து நடிப்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், நண்பர் கமலுக்கு உதவும் வகையில் அவரது நட்புக்காகவே ரஜினி மீண்டும் திரையில் கமலுடன் கை கோர்க்க ரஜினி முன்வந்திருக்கிறார் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

