கமல்ஹாசன் மட்டும் நினைத்து இருந்தால்… கண் கலங்கிய ரோஜா ரோஜா பாடகர் சத்யன் மகாலிங்கம் .. வெளியான சீக்ரட்…

0
Follow on Google News

கடந்த சில நாட்களாக இணையத்தில் காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற ரோஜா ரோஜா என்ற பாடல் தான் செம வைரலாகி வருகிறது. கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு 1999ம் ஆண்டு நடந்த ஒரு மேடை நிகழ்ச்சியில் எந்த விதமான பில்டப்புகளும் இன்றி மிக இயல்பாக அந்த அழகான பாடலை பாடியிருக்கிறார் ஒரு இளைஞர். அந்த வீடியோவை பார்த்து ரசித்த பலரும் இந்த பாடலை குறிப்பிட்டு இவ்வளவு அற்புதமான பாடும் இவர் யார் என்ற கேள்வியை எழுப்பி அந்த வீடியோவை வைரலாக்கினர். அதன் காரணமாக 26 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பாடலை பாடியவர் பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கம் என்பது தெரியவந்தது.

தனது உழைப்பை 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உலகம் கொண்டாடும் மகிழ்ச்சியில் மீண்டும் தனது குரலில் ரோஜா ரோஜா பாடலை பாடிய அவர், தனக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். பாடகர் சத்யன் மகாலிங்கம் மேடை பாடகராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர். பின்னர் திரையுலகில் கோரஸ் பின்னணி பாடகராக அடி எடுத்து வைத்தார்.

தனது தொடர் முயற்சிகளின் பலனாக கடந்த 2004ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கலக்கப்போவது யாரு பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து சரோஜா படத்தில் தோஸ்து படா தோஸ்து, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அட பாஸூ பாஸூ என்ற பாடலையும் கழுகு படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் மாற்றான் படத்தில் தீயே தீயே அடுத்து துப்பாக்கி படத்தில் குட்டி புலிக் கூட்டம் போன்ற 200-க்கும் மேற்பட்ட பாடல்களை சத்யன் மகாலிங்கம் பாடியிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பாடகர் சத்யன் மகாலிங்கம் கூறியதாவது, நான் வயது வித்தியாசம் இன்றி அனைவரிடமும் இப்போதும் வாய்ப்பு கேட்டு வருகிறேன். அவர்கள் தருவார்களா என்று தெரியாது. ஆனால் நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். தற்போது உள்ள பல பிரபல இசை கலைஞர்களின் ஆரம்ப காலத்தில் அவர்களோடு இருந்துள்ளேன்.

ஆனால் இப்போது அவர்கள் தங்களுக்கென ஒரு குரூப் பார்ஃம் செய்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கின்றனர். கொரோனா தொற்று காலத்துக்குப் பிறகு எனக்கு பாடுவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு என் மீது எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. நான் பாட வந்தால் என் மீதுள்ள நம்பிக்கையால் நான் அனைத்தையும் பார்த்துக் கொள்வேன் என்று அவர் வேறு வேலையை கூட பார்க்கச் சென்று இருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் பல படங்களை பாடியிருக்கிறேன். நான் பாடிய பாடலுக்கு சரியான கிரெடிட்டே கிடைக்கவில்லை. வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இடம்பெற்ற கலக்கப்போவது யாரு தான் என்னுடைய முதல் பாடல். அவருடைய வாய்ஸ் எனக்கு செட் ஆகுது. அதனால அவரே பாடட்டும் என்று கமல்ஹாசன் வழிவிட்டதால் மட்டுமே எனக்கு அந்த பாட்டு கிடைத்தது என்று அவர் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

மேலும் மெலோடி பாடல்கள் மீது பெரும் காதல் கொண்டுள்ள சத்யன் மகாலிங்கம், தான் பாடிய பாடல்களில் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல் என்றால் நேபாளி படத்தில் இடம்பெற்ற கனவிலே கனவிலே என்ற பாடல் தான் என்றும் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். அவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக இருந்தும் சரியான அங்கீகாரம் அடையாளம் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் ரோஜா ரோஜா பாடல் இப்போது அவருக்கான இடத்தை திறமைக்கான அடையாளத்தை 26 ஆண்டுகளுக்கு பின்பு பெற்றுத் தந்திருக்கிறது.