முக ஸ்டாலினின் இந்த செயல் உச்சபட்ச நகைச்சுவை..! இதைவிட பெரிய கேவலம் தமிழக முதல்வருக்கு இருக்கமுடியுமா? அண்ணாமலை கடும் தாக்கு..

0
Follow on Google News

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முல்லை பெரியாறு விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு துரோகம் செய்த மு.க.ஸ்டாலின் அவர்களே,
முதலில் மன்னிப்பு கேளுங்கள்.. பின் 142 அடி நீர்நிரப்புங்கள்… பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே….. அனைவருக்கும் வணக்கம். இன்று நான் உங்களிடம் ஒரு முக்கியமான செய்தி பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

அது முல்லைப் பெரியாறு விவகாரம். கேட்க ஆளில்லை என்று நினைத்து திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்திறன் இல்லாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.முல்லைப் பெரியாறு அணை முழுக்க முழுக்க தமிழர்கள் உழைப்பால் கட்டப்பட்ட அணை. சரித்திரத்தை யாரும் மறக்கவும் கூடாது மறைக்கவும் கூடாது. 1886ஆம், ஆண்டு இந்த அணை கட்ட திட்டமிடப்பட்டது. அப்போது விவசாய நிலங்களுக்கு பயன்தரும் வகையில் 999-வருடத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்த அணை கட்டப்பட்டபோது 1890ல் பெரு வெள்ளத்தினால் உடைந்து போனது, அதை மீண்டும் சீரமைத்து கட்டுவதற்காக அதன் பொறியாளர் அப்போதைய ஆங்கிலேய அரசை அணுகி உதவி கேட்டபோது, பொருளாதாரச் சூழல் காரணமாக மறுக்கப்பட்டது. சற்றும் மனம் தளராமல், அந்தப் பொறியாளர் இங்கிலாந்து திரும்பச் சென்று, தன் சொத்துக்களை எல்லாம் விற்று, பணத்துடன், தமிழகம் திரும்புகிறார். அவருடைய முயற்சிக்குத் தமிழர்கள் அனைவரும் துணை நிற்க முழுக்க முழுக்க, ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக் அவர்களின் சீரிய தலைமையில், அவருடைய சொந்த பணத்தில், தமிழக மக்களின் முழுமையான ஒத்துழைப்பில், உடல் உழைப்பில், 1895 ஆம் வருடம் முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது.

அப்போது தேக்கப்பட்ட நீர் அளவு 152 அடி இதன் மூலம் பயன்பெற்ற விவசாய நிலத்தின் அளவு 2 லட்சத்து 41ஆயிரம் ஏக்கர் ஆகும். இன்றைக்கும் மிக வலுவான நிலையில் இருக்கும் இந்த முல்லை பெரியாறு அணை 152 அடி நீரைத் தாங்கும் தரத்துடன் வலுவாக இருக்கிறது. ஆனால் நீரைத் தேக்கும் போது அதன் முழுப்பயனும் தமிழகத்திற்கு கிடைப்பதால் ஒரு நீண்டகால திட்டமிட்ட சதிவலை பின்னப்பட்டு படிப்படியாக இந்த நீர்த்தேக்க அளவு குறைக்கப்படுகிறது.

தற்போது உச்ச நீதிமன்றம் 142 அடி நீரை தேக்கி கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்து இருந்தும், அவசர அவசரமாக 134 அல்லது 135 அடி அளவைத் தாண்டும் முன்னரே, எந்த அனுமதியும் இன்றி, எந்த மரபையும் பின்பற்றாமல், தேனி மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்காமல், இடுக்கி மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்காமல், தமிழக அமைச்சருக்கு தெரிவிக்காமல், அணையின் மதகுகளை திறந்து வாழவைக்கும் நீரை கேரள அரசு பாழாக்கி இருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு.?

இது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் உட்சபட்ச அலங்கோலம். நம்முடைய உழைப்பினால் உருவான முல்லைப் பெரியாறு அணையை, கேரள அரசு நம் அனுமதி இல்லாமல் திறந்து நீரை வீணாக்கியதற்கு திமுக எப்படி துணை போனது?. கேரள கம்யூனிஸ்ட் பினராயி விஜயன் அரசு திமுக மு.க.ஸ்டாலின் அரசுக்கு தகவல் தெரிவித்ததா?… இல்லையா? இப்படி நீரின் அளவைப் படிப்படியாக குறைப்பதால் தற்போது 136 அடி நீரில் வெறும் 71ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே பாசன வசதி பெறுகிறது.

ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த அவலத்தை எப்படி திமுக அரசு அனுமதித்தது? இதை பாரதிய ஜனதா கட்சி பார்த்துக் கொண்டிருக்காது. மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து நாடகமாடுகிறார். அவருக்கு அணையைத் திறப்பது தெரியுமா? தெரியாதா? இந்த கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. தெரிந்து நடந்திருந்தால் அது நம் விவசாயிகளுக்கு செய்த துரோகம்.

தெரியாமல் நடந்திருந்தால் அவர் முதல்வராக தொடர அருகதை இல்லை. ஆகவே மு க ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய இமாலய தவறுக்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். பிறகு 142 அடிக்கு நீரை நிரப்ப வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் அவர்களே உங்கள் கோபாலபுரத்து சொத்துக்கள் தேனி மாவட்ட பகுதிகளில் இல்லை என்பதற்காக எங்கள் விவசாயிகளை பலி கொடுத்து விடாதீர்கள். பொதுப்பணித்துறை அமைச்சரும் கடமை தவறி இருக்கிறார் அவர் தன் பணியை ஒழுங்காகச் செய்து இருந்தால் இந்த தள்ளாத வயதில் வந்து அணையை பார்வையிட வேண்டிய அவசியமும் இல்லை! அவர் அப்படி வந்து பார்வை இட்டும் எந்தப் பயனும் இல்லை! வீணாகப் போன நீர் வீணாகியதே… அதை என்ன செய்ய முடியும்?

உச்சபட்ச நகைச்சுவையாக சமீபத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேரள அரசுக்கு பணிவோடு நன்றிகள் தெரிவித்து ஒரு கடிதம் எழுதுகிறார். முல்லைப் பெரியாறு அணை கட்டுக்குக் கீழ்ப்புறத்தில் உள்ள பத்து பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்ததற்கு நன்றி என்று
ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயனோ மரங்களை வெட்ட, தான் அனுமதி தரவில்லை என பதில் கடிதம் எழுதியுள்ளார். எதற்காக சம்பந்தமே இல்லாமல் முதல்வர் நன்றி சொன்னார் என தெரியவில்லை.

இதைவிட பெரிய கேவலம் தமிழக முதல்வருக்கு இருக்கமுடியுமா? இது 8.5 கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அசிங்கம், இதற்கு தமிழக முதல்வர் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
கேரள அரசு மதகுகளை திறக்குமா? திறக்காதா? என்பது தெரியவில்லை. மரங்களை வெட்ட அனுமதி கொடுத்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை. இப்படி எதுவும் தெரியாமல் இவர் ஒருபகல் கனவோடு ஆட்சி நடத்துகிறார். அதாவது அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் ஸ்டாலின் அவர்கள் துணை பிரதமர் ஆகப் போவதாக ஒரு நகைப்பிற்குரிய பகல் கனவு காண்கிறார்.

இங்கே தமிழகத்தில் அவரின் மகன் திரைப்பட நடிகரை முதல்வராக்க வேண்டும் என்று மனக்கோட்டை கட்டுகிறார். அதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு அளிப்பார்கள் என்பதற்காக தமிழக விவசாயிகளின் நலன்களை பலியிடுகிறார். கடந்த 2015இல், 2016இல், ஏன் 2018 ஆகஸ்ட் 16 வரை கேரள அரசு 142 அடி நீரை தேக்கி வைத்து இருந்தது ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இதுவரை இல்லாத நிலையாக நீர்மட்டம், 136 அடியாக குறைகிறது.

ஒன்றரை லட்சம் ஏக்கராக இருந்த பயன்பாட்டு நிலம் 71 ஆயிரமாக சுருங்குகிறது.
இது மு.க.ஸ்டாலின் அவர்களின் திறமையின்மையா? அல்லது கேரள கம்யூனிச அரசுடன் கூட்டு சதியா?.. மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது இரண்டு நடவடிக்கைகள்.

  1. உடனடியாக தவறை உணர்ந்து எங்கள் விவசாயிகளிடம் மன்னிப்பு கேளுங்கள்
  2. உடனே 142 அடி நீரைத் தேக்க நடவடிக்கை எடுங்கள்.

1979இல் அன்றைய கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கும், தமிழக முதலமைச்சர் M.G.ராமச்சந்திரன் அவர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தம் 142 அடி நீரை தேக்க தமிழகத்திற்கு உரிமை கொடுக்கிறது. அதற்கு விலையாகத் தமிழகம் அன்றே 25 கோடி பணம் கொடுத்திருக்கிறது. தமிழக-கேரள முல்லைப் பெரியாறு அணையின் சிக்கலைத் தீர்க்க அமைக்கப்பட்ட எஸ் எஸ்.பரோர் கமிட்டி மற்றும் மேத்தா கமிட்டி ஆகிய இரு கட்சிகளும் 142 அடி நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறது.
இப்படி நமக்கு சட்டரீதியான அனுமதி இருந்தும், மரபு ரீதியான உரிமைகள் இருந்தும், விவசாயிகளின் வாழ்வாதார தேவை இருந்தும், என்ன காரணத்திற்காக திமுக அரசு கேரள அரசுக்கு மர்மமான முறையில் திறக்க அனுமதி கொடுத்தது.?

இந்த வேளையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வைகோ அவர்களை கேட்டுக்கொள்கிறேன். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் இரண்டு நிலைப்பாடுகள் உள்ளன ஒன்று நியாயத்தின் பக்கம் மற்றொன்று கேரள அநீதியின் பக்கம். இதில் திரு வைகோ அவர்கள் நடு நிலை எடுக்க வாய்ப்பு இல்லை. அவர் விவசாயிகளுக்காக தர்மத்தின் பக்கம் இருக்கப் போகிறாரா? அல்லது சுயலாபத்திற்காக அரசுடன் சமரசம் செய்து கொள்ளும் மு.க.ஸ்டாலின் அநீதிக்கு துணை நிற்கப் போகிறாரா? என்பது அவர் முடிவு செய்து கொள்ளட்டும்.

அணையின் நீரை வெகுவிரைவில் 142 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், கேரளா அரசை பணிய வைக்கக்கூடிய ஆற்றலும் துணிச்சலும் தமிழக முதல்வருக்கு இல்லாவிட்டால், விவசாயிகளை அழைத்துக்கொண்டு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களுடன், முல்லை பெரியாறு அணையை நோக்கி செல்லத் தொடங்குவோம். முல்லைப் பெரியாறு அணையை முற்றுகையிடுவோம். கேரள அரசை பணிய வைப்போம். இந்த அடையாள போராட்டத்தின் மூலம், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் 5 மாவட்ட விவசாயிகளுக்கு துரோகம் செய்திருக்கும் திமுக அரசை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் மாவட்ட விவசாயிகள் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறோம்.

நம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் முல்லைப் பெரியாறு அணையின் மீட்புப் போராட்டத்திற்கு தயாராக இருங்கள். நம் உழைப்பால் கட்டியான அதன் நீரை ஒவ்வொரு ஆண்டும் வீணாக்கும் கேரள அரசின் அவலப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு வலிமையான முற்றுகைப் போராட்டத்திற்கு தயாராகுங்கள். நம்மால் முடியும் நம்புங்கள். அன்புச் சகோதரன் உங்க ‘‘அண்ணா’’

அய்யா வைகோ ஆளை காணோம்…..அண்ணன் திருமா ஓடி போனார்……காங்கிரஸ் கட்சி பல்லுல சுளுக்கு…..கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவு….