மலக்குடலில் 4.15 கிலோ தங்கம் கடத்தல்.! தஸ்லிம் பாத்திமா,கனகவல்லி, நிஷாந்தி மருத்துவமனையில் அனுமதி.!

0
Follow on Google News

தங்கத்தை கடத்துவதில் புதிய செயல்முறை பின்பற்றப்படுவது தெரியவந்துள்ளது. சென்னை விமானநிலைய சுங்கத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் பாலிதீன்/ ரப்பர் உரைகளில் வைக்கப்பட்டு, கயிற்றால் சுற்றப்பட்ட தங்கப் பசை அடங்கிய குப்பிகளை கடத்தல்காரர்கள் விழுங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தங்கம் கடத்தப்படுவது முதன்முறையாக சென்னையில் தெரியவந்துள்ளது. இதுவரை தங்கப்பசை அடங்கிய பொட்டலங்கள் மலக்குடலில் மறைத்துவைத்தே கடத்தி வரப்பட்டன.

உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் எமிரேட்ஸ் ஈகே 542, ஏர் அரேபியா ஜி9471 ஆகிய விமானங்களின் மூலம் துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த திருச்சியைச் சேர்ந்த கனகவல்லி (56), நிஷாந்தி (30) கலா பிரதீப்குமார் (53) ஜெயராஜ் (55), புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் (37) காபர் கான் (52) ராமநாதபுரத்தைச் சேர்ந்த முஹம்மத் ஹிக்காம் (25) மற்றும் தஸ்லிம் பாத்திமா (34) ஆகியோர் தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி விமானநிலைய சுங்கத் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தங்களது வயிற்றிலும் மலக்குடலிலும் தங்கம் கடத்தி வந்திருப்பதை ஒப்புக்கொண்டனர். தாங்கள் புறப்படுவதற்கு முன்பு தங்கப் பசை அடங்கிய குப்பிகளை விழுங்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் சுங்க சட்டத்தின்கீழ் அவர்களது உடலிலிருந்து குப்பிகளை வெளியில் எடுப்பதற்கு எழுத்து பூர்வமான தன்னார்வ கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர். அதன்படி மருத்துவ நிபுணரின் கண்காணிப்பில் குப்பிகளை பறிமுதல் செய்வதற்காக அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மிகவும் சிக்கலான இந்த முறையில், இயற்கையான வழியில் குப்பிகளை வெளியேற்றுவதற்காக கடுமையான உணவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த செயல்முறை முழுவதும் நிறைவடைவதற்கு எட்டு நாட்கள் தேவைப்பட்டன. 15-24 கிராம் வரையிலான ஒவ்வொரு குப்பியும் 1.1-1.7 சென்டிமீட்டர் அகலத்தில் இருந்தது. 8 பயணிகளின் வயிற்றிலிருந்தும் ரூ. 1.28 கோடி மதிப்பில் 2.88 கிலோ எடையில் 161 குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ரூ. 51.36 லட்சம் மதிப்பில் 1.18 கிலோ எடையில் 8 பொட்டலங்கள் அடங்கிய 61 குப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை தவிர ரூ. 30.64 லட்சம் மதிப்பில் 3 தங்க சங்கிலிகள், 8 தங்க வெட்டுத் துண்டுகள், 8 தங்க மோதிரங்கள், தங்கப் பசை அடங்கிய 2 பொட்டலங்கள் ஆகியவை அவர்களது கை பைகளிலிருந்தும், கால் சட்டையின் பைகளிலிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக 8 பயணிகளிடமிருந்து ரூ. 2.17 கோடி மதிப்பில் 4.15 கிலோ தங்கம் சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.