தமிழகத்தில் “லாட்டரி கிங்” என்று அறியப்படும் சாண்டியாகோ மார்ட்டின், மிக சாதாரண பின்னணியில் இருந்து தொடங்கி, இந்திய அளவில் மிகப்பெரிய லாட்டரி வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். மியான்மரில் வாழ்ந்த அவரது குடும்பம் பின்னர் கோயம்புத்தூரில் குடியேறியது. சிறுவயதிலேயே தேநீர் கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மார்ட்டின், படிப்படியாக தனது சொந்த விற்பனை வலையமைப்பை உருவாக்கினார்.
1980களின் இறுதியில் கோயம்புத்தூரில் லாட்டரி நிறுவனத்தை தொடங்கிய அவர், பின்னர் கர்நாடகா, சிக்கிம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு தனது தொழிலை விரிவுபடுத்தினார். தொடர்ந்து மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் அவரது நிறுவனங்கள் லாட்டரி சந்தையில் முக்கிய இடத்தை பிடித்தன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், நூற்றுக்கணக்கான ஏஜென்டுகள் என மிகப்பெரிய வணிக அமைப்பை உருவாக்கியதால் அவருக்கு “லாட்டரி கிங்” என்ற பெயர் நிலைத்தது. பின்னர் லாட்டரியை தாண்டி ரியல் எஸ்டேட், கட்டுமானம், கல்வி, மருத்துவம், மென்பொருள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பல துறைகளிலும் முதலீடு செய்து தனது வியாபாரத்தை விரிவுபடுத்தினார். இதே சமயம் பல்வேறு அரசியல் தலைவர்களுடனான அவரது நெருக்கமும் அதிகரித்தது.
2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலைவராக இருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டது. அதன்பிறகு மார்ட்டினின் லாட்டரி ஏஜென்சிஸ் நிறுவனம் தனது தொழிலை வடகிழக்கு மாநிலங்களை நோக்கி நகர்த்தியது. அங்கு மாநில அரசாங்கங்களுடன் மார்ட்டின் நெருக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டார். அதன் விளைவாக அரசாங்கத்தின் லாட்டரி ஸ்கீம்களையும் சேர்த்து மார்ட்டின் நடத்த ஆரம்பித்தார்.
சிக்கிம் அரசின் பரிசுச் சீட்டு திட்டம் மார்ட்டினுக்கு பெருமளவில் கைகொடுத்தது. சிக்கிம் லாட்டரி இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, மேகாலயா, அருணாச்சலப் பிரதேச மாநிலங்களிலும் மார்ட்டினின் லாட்டரி கரங்கள் படர்ந்தன.
2011ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய “இளைஞன்” திரைப்படத்தை மார்ட்டின் நிறுவனம் தயாரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதல்வராக ஜெயலலலிதா அரியணை எரிய பின்பு நில அபகரிப்பு மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை உள்ளிட்ட பல வழக்குகளில் மார்ட்டின் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்ட அவர், பின்னர் நீதிமன்றத்தின் மூலம் விடுதலை பெற்றார். இதற்கிடையில், அவரது மனைவி லீமா ரோஸும் பல்வேறு வழக்குகளில் சிக்கினார். மார்ட்டினின் நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்புகள் பல முறை சோதனைகள் நடத்தின. குறிப்பாக சட்டவிரோத லாட்டரி விற்பனை, பணமோசடி, போலி கணக்குகள் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன.
2023ஆம் ஆண்டு சிக்கிம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்ட வழக்கில், மார்ட்டினுடன் தொடர்புடைய நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. பல சர்ச்சைகள், சோதனைகள், வழக்குகள் ஆகியவற்றை கடந்து வந்தாலும், இந்திய லாட்டரி உலகில் மிக அதிகமாக பேசப்படும் பெயர்களில் ஒன்றாக சாண்டியாகோ மார்ட்டின் தொடர்ந்து இருந்து வருகிறார்.

