தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகராட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் 1480 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்தனர். மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளின் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் என 3 லட்சத்திற்கும் அதிக கட்டிடங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
புதிய கட்டிடங்களுக்கும் மண்டல அதிகாரிகள் தலைமையில் பில் கலெக்டர்கள் ஆய்வு செய்து வரி நிர்ணயித்து வசூலிக்கின்றனர். கடந்த ஆண்டு, மதுரை மாநகராட்சி கமிஷனராக தினேஷ்குமார் இருந்தபோது, வரிவசூல், புதிய சொத்து வரி நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து திடீர் ஆய்வு நடத்தியதில், மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. சுமார் 150 கட்டிடங்களுக்கு, சொத்து வரி குறைக்கப்பட்டு, 2022, 2023ம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரி வருவாய் இழப்பு மாநகராட்சிக்கு ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தொடர் தீவிர விசாரணை நடத்தியதில், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு வரியை குறைக்க நீதிமன்றம் உத்தரவு வேண்டும். அல்லது மாநகராட்சி கூட்டத்தின் தீர்மானம் வேண்டும். ஆனால் இவ்விரு நடைமுறைகளும் இன்றி மண்டலங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு குறைவான சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது கண்டிபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இவ்வழக்கில் விசாரணை வேகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் வினோதினி தலைமையிலான விசாரணையில் ஓய்வுபெற்ற உதவி கமிஷனர், உதவி வருவாய் அலுவலர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், உதவியாளர் தனசேகரன், புரோக்கர்கள் சாகா உசேன், ராஜேஷ் ஆகியோரை போலீஸ் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க பட்டு வருகிறார்கள்.
மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர்களில் பதிவான தகவல்களை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் போலீஸ் காவலில் எடுத்து உதவியாளர் தனசேகரன், புரோக்கர்கள் சாகா உசேன், ராஜேஷ் ஆகியோரை விசாரித்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையில், திமுக மண்டலத் தலைவர்கள் வாசுகி , சரவண புவனேஷ்வரி , பாண்டிச்செல்வி , முகேஷ் சர்மா , சுவிதா விமல் ஆகிய 5 பேரிடமும் போலீஸார் விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 2 பேர் கொடுத்த ஆதாரங்கள், மாநகராட்சி ஊழியர்கள் அளித்த தகவல்கள், சொத்துவரி மட்டுமல்லாது மேலும் சில முறைகேடுகள் தொடர்பாகவும் பொதுமக்கள் ரகசியமாக அனுப்பிய ஆதாரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போலீஸார் அறிக்கை தயார் செய்ததை தொடர்ந்து, இந்த முறைகேட்டில் தொடர்புடைய மதுரை மாநகராட்சி திமுக மண்டல் தலைவர்களில் எந்த நேரத்திலும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற சூழல் உருவானது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சியில், குடியிருப்பு கட்டிடங்களின் வரியை நிர்ணயம் செய்யப்பட்டு மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது என்றும், குறிப்பாக 370 கோடி ரூபாய் சொத்து வரி என கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டதால் கூடுதலாக 250 கோடி அளவில் கிடைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வரும் நிலையில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு குறையாமல் மிக பெரிய ஊழல் மதுரை மாநகராட்சியில் நடந்துள்ளது என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்து ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மண்டல் தலைவர்கள் கைது செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால், அதற்கு முன்பே அவர்களுடைய மண்டல் தலைவர்கள் பொறுப்பை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார் முதல்வர் முக ஸ்டாலின், இதனிடையே சொத்துவரி ஏய்ப்பு விவகாரத்தில் தற்போது ராஜினாமா செய்துள்ள மண்டல தலைவர்களில் 4 பேர் எந்த நேரமும் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

