தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய பிரதமர்… அமலுக்கு வந்த புது சட்டம்… நினைத்து பார்க்க முடியாத சலுகைகள்..

0
Follow on Google News

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள அமலில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து தற்போது 4 புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசு கொண்டு வந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள், ஊழியர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பலன்களை நீட்டிப்பதோடு, ஒப்பந்த கால ஊழியர்களுக்கான (Fixed-Term Employees) பணிக்கொடை (Gratuity) பெறுவதற்கான கால வரம்பை 5 ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாகக் குறைத்து மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது.

இந்தச் சீர்திருத்தங்களில் முதல் முறையாக, டிஜிட்டல் தளங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கானோருக்குச் சட்டத் தெளிவைக் கொடுக்கும் வகையில், தற்காலிக பணி அல்லது ஃப்ரீலேன்சிங் (Gig Work), தளப் பணி (Platform Work) மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் (Aggregators) ஆகியவை முறையாக வரையறுக்கப்பட்டுள்ளன

சம வேலைக்கு சம ஊதியத்தை உறுதி செய்வதுடன் ஒப்பந்த பணியாளர்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க சட்டவிதி. வேலைவாய்ப்பு, ஊதியம், மற்றும் வேலை நிலைமைகளில் ஆண்-பெண், திருநங்கைகள் உட்பட பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதையும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

அனைத்து தொழில்களிலும் இரவு ஷிப்டுகளில் பெண்களை பணியில் அமர்த்தலாம் என்றும், அவர்களின் பாதுகாப்பை நிறுவனம் உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு பெண் ஊழியர்களின் சம்மதம் வேண்டும். அனைத்து வகையான பணியாளர்களுக்கும் பணி நியமான ஆணையை கட்டாயம் வழங்க வேண்டும். மேலும் பீடி தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை புதிய சட்டம் நிர்ணயித்துள்ளது.

தற்போது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என, வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால் இந்த சட்டம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்றும் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்றும் மாற்றிக்கொள்ள வழி வகுக்கிறது. இதன் மூலம் கூடுதலாக வேலை பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரட்டிப்பு சம்பளம் வழங்க சட்டம் வலியுறுத்துகிறது.

பணி நேரத்தை தாண்டி வேலை செய்யும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று புதிய சட்டம் வழிவகை செய்திருக்கிறது. 40 வயதை கடந்த அனைத்து பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் கட்டாய இலவச மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மாதந்திர ஊதியத்தை 7-ம்தேதிக்குள் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்றும், நிறுவனத்தில் கேண்டீன், குடிநீர், சுகாதாரமான கழிவறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு குறைந்த பட்ச ஊதியம் ரூ.18,000-ல் இருந்து ரூ.24,000 ஆக திருத்தி அமைக்கப்பட்டது. இதனை அனைத்து தொழிலாளர்களுக்கு உறுதிபடுத்தும் வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நிரந்தர பணியாளர்களை போன்று ஒப்பந்த ஊழியர்களுக்கும் விடுமுறை, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஸ்விகி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களில் டெலிவரி ஊழியர்களுக்கும் PF, மருத்துவ காப்பீடு போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ” சுதந்திரத்திற்கு பிறகு தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இது.

நாட்டின் தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கும். தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும். புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும். சமூகப் பாதுகாப்பு சரியான நேரத்தில் ஊதியம் மற்றும் பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.