தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை என்கிற விமர்சனம் ஆளும் திமுகவை நோக்கி எழுந்துள்ளது. மாணவர்கள், விவசாயிகள், பெண்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக பிரிவுகளுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்கிற அதிருப்தி மக்கள் மத்தியில் உள்ளது.
முதலில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைப் பார்க்கலாம்.கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தனர் தமிழக இளைஞர்கள் பலர். ஆனால் கல்விக் கடன் தள்ளுபடி தொடர்பான முழுமையான நடவடிக்கைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கான வாக்குறுதிகளில், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகைகளை சர்க்கரை ஆலைகள் செலுத்த கடைசி தேதி நிர்ணயிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பல விவசாயிகள் இன்னும் நிலுவைத் தொகை தொடர்பாக தீர்வு கிடைக்காமல் பரிதவித்து வருவதை பார்க்க பார்க்க முடிகிறது.
டிரிப் இரிகேஷன் திட்டத்திற்கு 90 சதவீத மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது. மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தானிய கிடங்குகள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று விவசாயிகள் தரப்பில் இருந்து அதிருப்தி இருந்து வருவதை பார்க்க முடிகிறது.
மேலும், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் எதிர்பார்த்தபடி நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான வாக்குறுதிகளில், பெண்கள் சுயஉதவி குழுக்களுக்கு 25 சதவீத மானியம் வழங்கப்படும் என்றும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் 2021 தேர்தல் வாக்குறுதிகளில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாக்குறுதிகள் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்ற விமர்சனங்களும் தமிழக பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான திமுக கொடுத்த வாக்குறுதிகளில், துப்புரவு பணியாளர்களுக்கு வாராந்திர விடுமுறை மற்றும் கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 70 மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கிற அதிருப்தி அரசு ஊழியர்களிடம் இருந்து வருகிறது. மேலும் அங்கன்வாடி மற்றும் நடுநிலை உணவு திட்ட பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய வசதிகள் தொடர்பாகவும் அதிருப்தி நிலவுகிறது.
மேலும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்து இருந்தது, ஆனால் நடைமுறை படுத்தவில்லை, இந்நிலையில் திமுக அரசு கடந்த 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிக்கு பதில் எங்கே என்கிற தமிழக மக்களின் கேள்விக்கு திமுக தரப்பின் பதில் என்ன என்கிற விவாதமும் அரங்கேறி வருவதை பார்க்க முடிகிறது.

