எடுபடாத சாதி அரசியல்…சாதி அடையாளத்தை முன்னிறுத்தி போட்டியிட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டிய தமிழக மக்கள்.!

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வேட்பாளரின் சாதி அடையாளம் கை கொடுக்கவில்லை என்பது வெளியான தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளது,வட தமிழகம் மட்டுமின்றி குறிப்பாக முக்குலத்தோர் சமூகம் பெரும்பான்மையாக இருக்க கூடிய தென் தமிழகத்திலும் சாதி பார்த்து மக்கள் ஒட்டு போடவில்லை, வேட்பாளரின் தகுதி மற்றும் அவர் சார்ந்த கட்சியை பார்த்து மக்கள் வாக்களித்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

வட தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான வன்னியர் வாக்குகளை பெறுவதற்காக அந்த சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசு, இந்த இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியானதும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கியது அதிமுக, ஆனால் தருமபுரி மாவட்டத்தை தவிர்த்து வன்னியர்கள் அதிகம் உள்ள வட மாவட்டத்தில் உள்ள பெருபாலான தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மற்றும் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது.

இதே போன்று தென் மாவட்டத்தில் முக்குலத்தோர் வாக்குங்கள் பெரும்பான்மையாக உள்ள கோவில் பட்டி தொகுதியில் அதே சமூகத்தை சேர்ந்த TTV தினகரன் தோல்வியை தழுவியுள்ளார், அதே போன்று காரைக்குடி தொகுதியில் 7 ஆயிரம் வாக்குகள் மட்டுமே உள்ள வள்ளம்பர் சமூகத்தை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார், மேலும் காரைக்குடி தொகுதியில் வள்ளம்பர் சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்கும் வெறும் 5 ஆயிரம் மட்டுமே பதிவாகி இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை வடக்கு தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் வசிக்கின்றனர், இங்கே திமுக சார்பில் நாயுடு சமூகத்தை சேர்ந்த கோ.தளபதி போட்டியிட்டார், அவரை எதிர்த்து பாஜக சார்பில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த டாக்டர் சரவணன் போட்டியிட்டார். அதிக முக்குலத்தோர் சமூகம் இந்த தொகுதியில் இருப்பதால் நாயுடு சமூகத்தை சேர்ந்த வேட்பாளர் கோ.தளபதியை எளிதாக சரவணன் வீழ்த்திவிடுவார் என பேசப்பட்டது.

ஆனால் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை மட்டும் நாயுடு சமூகம் உள்ள மதுரை வடக்கு தொகுதியில் சுமார் 23 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நாயுடு சமூகத்தை சேர்ந்த கோ. தளபதியை வெற்றி அடைய செய்துள்ளனர் அந்த தொகுதி மக்கள். இது குறித்து அரசியல் விமர்சகர் ஒருவர் கூறுகையில், தமிழகம் முளுவதும் பெருபாலான இடங்களில் சாதி பார்த்து மக்கள் ஒட்டு போடும் காலம் மலையேறிவிட்டது, வேட்பாளர் மற்றும் கட்சியின் செல்வாக்கை ஆராய்ந்து ஒட்டு போட்டு இனிவரும் தேர்தல்களில் சாதி அடிப்படையில் வாக்குகள் பதிவாகாது என்பதை தெளிவாக இந்த தேர்தலில் மக்கள் உணர்த்தியுள்ளதாக கூறியுள்ளார்.