திருப்பரங்குன்றம் தொகுதியின் கள நிலவரம்… யாருக்கு வெற்றி வாய்ப்பு … வெளியான சர்வே ரிப்போர்ட்…

0
Follow on Google News

மதுரையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் தொகுதியில் 1977 ல் தொடங்கி சுமார் அரை நூற்றாண்டு காலமாக நடந்த 13 சட்டசபை தேர்தலில் முக்குலத்தோர் சமூகத்தை தவிர்த்து வேறு எந்த ஒரு மாற்று சமூகமும் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை, அந்த வகையில் மதுரையில் உள்ள 10 சட்டமற்ற தொகுதிகளில் சில தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகள் முக்குலத்தோர் தொகுதி என்றாலும் கூட அதில் முதன்மை தொகுதியாக இருப்பது திருப்பரங்குன்றம்.

இந்த தொகுதியில் தற்பொழுது அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ராஜன் செல்லப்பா முக்குலத்தோர் சமூகம் மட்டுமின்றி, திருப்பரங்குன்றம் அவருடைய சொந்த தொகுதி, மேலும் திமுகவுக்கு மிக பெரிய சவாலாக விளங்க கூடிய வலுவான வேட்ப்பாளரும் கூட, திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு பொன்னுத்தாய், ராஜன் செல்லப்பாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அதற்கு முன்பு 2016 சட்டசபை தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் போட்டியிட்டு தோல்வியையே தழுவினர். திமுக சார்பில் போட்டியிட்ட மணிமாறன் மற்றும் பொன்னுத்தாய் இருவருமே முக்குலத்தோர் சமூகம் என்றாலும் கூட இவர்கள் இருவருக்குமே திருப்பரங்குன்றம் சொந்த தொகுதி கிடையாது. அந்த வகையில் திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த வேட்பாளராக இருக்க வேண்டும், அதிலும் வேட்பாளர் அதே தொகுதியை சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பது கடந்த கால தேர்தல் முடிவுகள் உறுதி படுத்தி இருக்கிறது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுகவை பொறுத்த வரை,திமுக ஆட்சியில் மகளிர் உரிமை தொகை, இலவச பட்டா, இலவச பேருந்து திட்டம், சாலை வசதி , குடிநீர் வசதி என திருப்பரங்குன்றம் புறநகர் பகுதியில் உள்ள மக்களிடம் திமுகவுக்கு நன் மதிப்பை பெற்று கொடுத்து இருக்கிறது. ஆனால் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையடையவில்லை போன்ற நகர் பகுதியில் மாநகராட்சியின் மெத்தன போக்கு நகர் பகுதி மக்களுக்கு திமுக மீது அதிருப்தி இருப்பதையும் பார்க்க முடிகிறது.

தற்போதைய கள நிலவரப்படி, கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சுமார் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய திமுக கூட்டணி, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பளாரை விட சுமார் 5 ஆயிரம் வாக்கு முன்னணி பெற்றுள்ளது . குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் உள்ள மற்ற திருமங்கலம் உட்பட சட்டமன்ற தொகுதியில் பின் தங்கி இருந்த மாணிக்க தாகூர் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தது திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தான்.

அந்த வகையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலவரம் படி திமுகவுக்கு வாக்கு சதவிகிதம் அடிப்படையில் வளர்ச்சி என்பதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக தனித்து போட்டியிட்டது, தற்பொழுது அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ளது அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட இருக்கும் ராஜன் செல்லப்பாவுக்கு கூடுதல் பலமாக பார்க்க படுகிறது.

திமுக சார்பில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் யார் போட்டியிட போகிறார்கள், கூட்டணி கட்சிக்கு ஒதுக்குமா? அல்லது திமுகவே நேரடியாக போட்டியிடுமா என இன்னும் முடிவாகாமல் இருந்து வரும் நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் ராஜன் செல்லப்பா மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவார் என்பதை உறுதி படுத்தும் வகையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டார் ராஜன் செல்லப்பா.

இப்படி ஒரு சூழலில், ராஜன் செல்லப்பா போன்ற வலுவான வேட்ப்பாளரை திமுக எதிர்கொள்ள வேண்டும் என்றால், ராஜன் செல்லப்பா சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தில் உள்ள ஒருவருக்கு , அதுவும் சொந்த தொகுதியை சேர்ந்த ஒருவரை திமுக வேட்ப்பாளராக களம் இறக்கினால் மட்டுமே அதிமுக வேட்பாளர் ராஜா செல்லப்பாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.

2021 தேர்தலுக்கு பின் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல், திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 15 மாநகராட்சியில் வார்டுகளில் 14 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி இருந்தது, அதனை தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமயிலான கூட்டணி 5,500 வாக்குகள் முன்னிலை பெற்று இருந்தது. அந்த வகையில் 2021 சட்டசபை தேர்தலுக்கு பின்பு நடந்த தேர்தல்களில் திமுகவுக்கு சாதகமாக சூழல் நிலவி வரும் நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலில் தகுதியான வேட்பாளரை திமுக களம் இறங்கி சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பயணத்தை தொடருமா .?என்பதை பொருத்து இருந்து பார்க்க வேண்டும்,

இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதியை திமுகவிடம் பெற்று, அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரனை வேட்பளராக களம் இறக்குவதற்கான முயற்சியிலும் இறங்கி உள்ளது என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. கமியூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜேந்திரன் அதே தொகுதியை சேர்ந்த முக்குலத்தோர் சமூகம் என்பது குறிப்பிடதக்கது.