கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக கட்சியின் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிர் இழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த துயர சம்பவத்துக்கு காரணம் விஜய் மற்றும் தவெக தான் என ஒரு தரப்பினர் பரபபரப்பு குற்றசாட்டுகளை வைத்தனர், 41 பேர் உயிர் இழந்தது தொடர்பாக விஜய் கைது செய்யப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் கருத்துக்களை பதிவு செய்தனர்.
ஆனால் தவெக மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசு மீது கரூர் சம்பவத்துக்கு எதிராக குற்றசாட்டுகளை வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து திமுக அரசு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது, ஆனால் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தவெக உட்பட எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியது.

இந்நிலையில் மாநில அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணையில் திருப்தி அடையாத உச்சநீதிமன்றம், கரூர் வழக்கின் விசாரணையைச் சிபிஐ-க்கு மாற்றியது. இதனை தொடர்ந்து கரூரில் முகாமிட்டு சிபிஐ இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது, மேலும் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பணி மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி இருந்தது சிபிஐ.
இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரான தவெக நிர்வாகிகளிடம் விசாரணை அதிகாரி சுனில் குமார் தலைமையிலான குழு, சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணையைத் தொடர்ந்து நடத்தி இருக்கிறது. ‘கரூரில் பொதுக்கூட்டம் நடத்த எப்போது அனுமதி கோரப்பட்டது? எவ்வளவு பேர் கூட அனுமதி வழங்கப்பட்டது? திட்டமிடப்பட்ட நேரத்தை விட விஜய் வருகையில் தாமதம் ஏற்பட்டதா?
அதற்காகத் தொண்டர்களை 4 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வைத்தது ஏன்?’ எனப் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவெக தரப்பில் செய்யப்பட்ட தன்னார்வலர் ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை வழங்கிய கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்ப பட்டிருக்கிறது.
மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், தமிழ்நாடு காவல்துறை சார்பாக எஸ் பி ஜோஸ் தங்கையா, ஏடிஎஸ்பி ஆகியோர் ஆஜராகி உள்ளனர். இவர்களிடம் தனித் தனியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அடுக்கடுக்காக பல்வேறு முக்கிய கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பி இருந்தனர். இந்த விசாரணை சுமார் 9 மணி நேரம் நடைபெற்று இருக்கிறது.
மேலும் குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறித்துத் தவெக நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணையின் இறுதியில் பெறப்படும் வாக்குமூலங்கள், ஏற்கனவே கரூரில் சிபிஐ அதிகாரிகள் சேகரித்த சாட்சியங்களுடன் ஒப்பிடப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது சிபிஐ.
இந்நிலையில் விஜய்யை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்க்கான வேளையில் சிபிஐ இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவைத்து சிபிஐ விசாரணையை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கையையும் சிபிஐ மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

