சொத்தில் மட்டும் பங்கு.. அரசியலில் இடமில்லை..! முக.அழகிரி – முக.ஸ்டாலின் இடையே சமரசம்..

0

முதல்வர் முக ஸ்டாலின் அவரது சகோதரர் முக அழகிரி இருவருக்கும் இடையே நடந்து வந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துள்ளது, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டவர் முக அழகிரி, இதன் பின்பு திமுக தலைவராக இருந்த கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அமைதியாக இருந்துவந்த முக அழகிரி, அவர் மறைவுக்கு பின் திமுகவில் மீண்டும் தன்னை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி பலவேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

ஆனால் முக ஸ்டாலின் பிடிவாதமாக அவரை மீண்டும் திமுகவில் இணைக்க முன் வரவில்லை, அரசியலில் இடமில்லை என்றாலும் பரவாயில்லை, முரசொலி அறக்கட்டளையில் மகன் துரை தயாநிதியை இயக்குனராக நியமிக்க முயற்சி செய்தார் அழகிரி, அதற்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து சம்மதம் தெரிவிக்கவில்லை, இதனை தொடர்ந்து முக ஸ்டாலினுக்கு எதிராக சில அரசியல் நகர்வுகளை எடுத்தார் முக அழகிரி, தேர்தலுக்கு முன் தனது ஆதரவாளர்களை திரட்டி ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து தேர்தலுக்கு முன் குடும்ப உறுப்பினர்களை மூலம் அழகிரி – ஸ்டாலின் இடையே சமரசம் பேச்சுவார்த்தை நடத்தி அதில் சுமூக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்தார் முக அழகிரி, இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் முக அழகிரி, பதவி ஏற்பு விழாவில் முக அழகிரி மகன் துரை தயாநிதி பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் மதுரை வந்த முதல்வர் அவருடை அண்ணன் முக அழகிரியை சந்திப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெறவில்லை, இந்நிலையில் அழகிரி – ஸ்டாலின் சந்திப்பு நடைபெறுவதாக இருந்ததாகவும் ஆனால் அது கடைசி நேரத்தில், முதல்வர் முக ஸ்டாலின் திருச்சி செல்ல இருந்ததால் இவர்களின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது, இந்நிலையில் விரைவில் சென்னை கோபாலபுர இல்லத்தில் இவர்கள் சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியகியுள்ளது.

இந்நிலையில் முக அழகிரி மீண்டும் திமுகவில் இணைக்கப்படுவாரா என பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், மீண்டும் முக அழகிரி கட்சிக்குள் வந்தால் கடந்த பத்து வருடங்களாக தென் மாவட்டத்தில் முக அழகிரிக்கு எதிராகவும், முக ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட்ட திமுக மாவட்ட செயலாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படும் என்றும், அதனால் குடும்ப சொத்தில் மட்டும் பங்கு கொடுத்து, அரசியிலில் முக அழகிரி தலையீடு இல்லாமல் இருப்பதில் தீவிரமாக இருக்கிறார் முக ஸ்டாலின் என கூறப்படுகிறது.