முதல்வர் வழிகாட்டுதலை பின்பற்றாத திமுக எம்.எல்.ஏ.! அரசு அதிகாரிகளை கடுமையாக பேசியது பெரும் பரபரப்பு..

0
Follow on Google News

முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்ற பின் தலைமை செயலக வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது ஆளுயர கட்அவுட்கள் வைக்கப்பட்டு இருந்ததை அதிரடியாக அகற்ற உத்தரவிட்டார் முதல்வர் முக ஸ்டாலின்,மேலும் தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் எங்கும் கருணாநிதி மற்றும் தன்னுடைய புகைப்பட பேனர் வைக்க கூடாது என்று உத்தரவிட்டு, அரசு அலுவலகத்தில் மட்டும் சிறிய அளவில் புகைப்படம் வைக்கலாம் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது, அரசு அலுவலக வளாகங்களில் தன்னுடைய புகைப்பட பேனர்களை வைக்க கூடாது என அதிரடியாக வலியுறுத்தியிருந்தார், முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த செயல்பாடுகள் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, ஆனால் தற்போது பூந்தமல்லி திமுக சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடு முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிர்மறையாக அமைந்துள்ளது மட்டுமின்றி பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 21ஆம் தேதி பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் தனியார் சித்த மருத்துவ மையம் திறப்பு விழாவின் போது அங்கு வந்த ஆளும் கட்சி எம் எல் ஏ கிருஷ்ணசாமி, அங்கே வைக்கப்பட்டிருந்த பேனரில் தன்னுடைய புகைப்படம் பெயர் இல்லாததை பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளார், ஏன் என் பெயர் போடவில்லை என்று அங்கிருந்த அதிகாரிகளை சரமாரியாக கேள்விகளை கேட்டு கடுமையாக பேசியுள்ளார்,

இதனை தொடர்ந்து என்ன செய்வது என திகைத்து போன அதிகாரிகள் வேறு வழியின்றி வாய்மொழியாக மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து சித்த மருத்துவ மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன. பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றன. தொற்றின் காரணமாக உயிரிழப்பு அதிகரித்து காணப்பட்டு வருகின்ற நிலையில் திமுக எம் எல் ஏ தனது பெயர் பேனரில் இடம் பெறவில்லை என அதிகாரிகளை வசை பாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அரசு நிகழ்ச்சிகளில் தன்னுடைய புகைப்படம் வேண்டாம் என முதல்வர் முக ஸ்டாலின் பெருந்தன்மையுடன் நடந்து கொன்டு அரசு அதிகாரிகள், மற்றும் பொது மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், தனது பெயர் இடம்பெறவில்லை என பூந்தமல்லி திமுக எம் எல்,ஏ அரசு அதிகாரிகளை கடுமையாக பேசிய சம்பவம் திமுக ஆட்சிக்கு முதல்வருக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவது போன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.