பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறை பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில், அதற்கு முன்பு 2014, 2019 தேர்தலை விட குறைவான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று, தனி பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாவது முறையாக பிரதமராக இருந்து வருகிறார் மோடி. கடந்த 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததற்கு முக்கிய காரணமாக ஆர் எஸ் எஸ் மற்றும் பிரதமர் மோடி, அமித்ஷா இடையில் இருந்த இடைவெளி தான் என கூறப்படுகிறது.
பாஜக தேசிய தலைவர் ஜெ பி நட்டா ஆர் எஸ் எஸ் துணையில்லாமல் பாஜக வெற்றி பெரும் என பேசிய பேச்சு ஆர் எஸ் எஸ் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது, மேலும் உத்திரபிரதேசத்தில் பாஜக பல இடங்களில் தோல்விக்கு முக்கிய காரணம், அங்கே வேட்பாளர் தேர்வில், அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் இருவருக்கும் இடையில் நடந்த கருத்து வேறுபாடு தான் என கூறப்படுகிறது.

அதாவது உத்திரபிரதேசத்தில் பாஜக தோல்வி அடைந்த சுமார் 30 தொகுதிகளில் பழைய வேட்ப்பாளர்களை மாற்றி விட்டு புதிய வேட்பாளர்களை யோகி போட சொல்ல, அதற்கு அமித்ஷா மறுப்பு தெரிவித்து பழைய வேட்பாளர்களை மீண்டும் போட்டியிட செய்தது தான், பாஜக சுமார் 30 தொகுதிகளை உத்திரபிரதேசத்தில் இழக்க காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தேர்தலுக்கு பின்பு அமித்ஷா மற்றும் யோகி இருவருக்கும் இடையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது, மேலும் ஆர் எஸ் எஸ் மற்றும் பிரதமர் மோடி , அமித்ஷா இவர்களுக்கு இடையிலும் சுமுகமான முடிவு எட்டப்பட்டு விட்டது என்கிறது டெல்லி வட்டாரங்கள். ஆனாலும் இன்னும் பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்வதில் பிரதமர் மோடி, அமித்ஷா, மற்றும் ஆர் எஸ் எஸ் இடையே சுமுகமான முடிவு எட்டப்படாததால் தான் தேசிய தலைவர் தேர்வில் இழுபறியாக இருக்கிறது என கூறப்படுகிறது.
இந்நிலையில், நாக்பூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத், “உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டால், நீங்கள் இப்போது உங்களுடைய வேலைகளை நிறுத்திவிட்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்” என்று பேசியவர். 75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கி நின்று மற்றவர்களுக்கு வழிவிடுங்கள் என்றும், தேச சேவைக்கு தன்னை அர்ப்பணித்த போதிலும் அதற்கும் ஒரு வயது, நேரம் உண்டு என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசி இருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு தற்போது 74 வயது ஆகிவரும் நிலையில், அவருக்கான மறைமுக செய்தியாகவே மோகன் பாகவத்தின் உரை உள்ளது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோகன் பகவத் சொன்ன வயது வரம்பு குறித்த பேச்சு, நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் குறித்து உள்ளதாக பலர் கருதுகின்றனர்.
பிரதமர் மோடி தற்பொழுது 74 வயதாக இருக்கிறார். அடுத்த ஆண்டு அவர் 75 ஆகிறார். இதனால், அவரும் அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, மோடி 75 வயதில் பதவி விலக வேண்டும் என்ற கருத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா நிராகரித்திருந்தார். “பிரதமர் மோடிக்கு வயதின் எல்லை அமையும் என்று எங்கும் கூறவில்லை; அவர் நாடு முன்னேறும் வரை தொடருவார் என்று பேசியிருந்தார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்மையில் குஜராத்தில் நடத்திய ஒரு கூட்டத்தில், “இரண்டு தசாப்தங்கள் அரசியலில் இருந்தது போதுமானது. இனிமேல் வேதங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்றதுமே, இந்த விவாதங்களை மேலும் தூண்டியுள்ளது. இந்நிலையில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் 75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கி நின்று மற்றவர்களுக்கு வழிவிடுங்கள் என பேசிய பேச்சு பொதுவான கருத்து தான் என்றும், வரும் 2029ல் பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்றும், 2031 வரை பிரதமராக மோடி தொடர்வார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

