கக்கன், காமராஜர் வரிசையில் எம்.ஆர் காந்தி,.! கசங்கிய வேட்டி, ஜிப்பாவுடன் சட்டமன்றம் செல்லும் இவர் யார் தெரியுமா.?

0
Follow on Google News

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள 75 வயது மூத்த அரசியல் தலைவர் எம்.ஆர்.காந்தி பெரிய பணபலமோ, அதிகாரபலமோ கொண்டவர் அல்ல. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்காகவும் பா.ஜ.கட்சியின் பணிகளுக்காகவும் மறைந்த முன்னால் பிரதமர் வாஜ்பாய் போன்று திருமணம் கூட செய்துகொள்ளாமல் பொது வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர்.

சொந்தமாக வீடு கூட இல்லை. காலில் செருப்புக்கூட போடுவது இல்லை. கசங்கிய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு மாவட்டம் முழுவதும் ஒரு சராசரி மனிதனாக சுற்றி வருகின்றவர், தற்போது இருக்கும் பாஜக அரசியல் தலைவர்களில் மூத்த அரசியல் தலைவர் எம்.ஆர்.காந்தி. பா.ஜ.க-வின் தாய் இயக்கமான ஜனசங்கத்தின் மாவட்ட தலைவராக 1967-ம் ஆண்டே பொறுப்பு வகித்தவர். 1975-ல் மிசாவில் ஓராண்டு சிறையில் இருந்தவர்.

ஜனசங்கம் பா.ஜ.க-வாக மாறியபோது 1980-ல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றவர். 2001-ல் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக ஆனார். சட்டசபை தேர்தலில் ஆறுமுறை தோல்வியடைந்து, ஏழாவது முறை வெற்றிபெற்றிருக்கிறார். 1980-ல் நாகர்கோவில் சட்டசபை தொகுதியிலும், 1984-ல் குளச்சல் தொகுதி, 1989-ல் மீண்டும் நாகர்கோவில் தொகுதி, 2006-ல் மீண்டும் குளச்சல், 2011-ல் கன்னியாகுமரி தொகுதியிலும், 2016-ல் நாகர்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2021 தேர்தலில்தான் எம்.ஆர்.காந்தியால் வெற்றிப்பெற முடிந்தது. இயக்கப் பணிக்காக வாழ்பவர், மிகவும் எளிமையான,நேர்மையான,மனித நேயம் உள்ள மனிதர், மூத்த தலைவர் என்ற நல்ல பெயரும் எம்.ஆர்.காந்தி வெற்றிப்பெற காரணமாக அமைந்தது. இவர் எதிர்த்து வெற்றி பெற்றது சாதாரண மனிதரை எதிர்த்து அல்ல.. அமைய இருக்கும் திமுக அமைச்சரவையில் இடம்பெறும் கனவுடன் பல கோடிகளை செலவு செய்து, போட்டியிட்டவர் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான சுரேஷ்ராஜன்.

ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற சமயத்தில் தி.மு.க அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். கடந்த சட்டசபை தேர்தலில் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஆனார். இந்த முறை மீண்டும் நாகர்கோவிலில் போட்டியிட்ட சுரேஷ்ராஜன், எளிமையின் சிகரமான எம்.ஆர். காந்தியிடம் வெற்றியை பறிகொடுத்து விட்டார். செல்வந்தரான சுரேஷ்ராஜனின் அமைச்சர் கனவை கலைத்து, இந்த எளிமையான,நேர்மையான மனிதரை தேர்வு செய்து சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளார் நாகர்கோவில் வாக்காளர்கள்.