அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் முக்கிய தலைவராக, எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த நிலையில் இருந்த இரண்டாம் கட்ட தலைவர்களின் ஒருவராக இருந்து வந்தவர். ஒரு நாளைக்கு அதிமுக சார்பில் நான்கு முறை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வந்தவர், இது என்னுடைய கருத்து இல்லை, அக்கட்சியின் கருத்து என உறுதி படுத்தி, எடப்பாடி பழனிச்சாமியின் குரலாக ஒலித்து வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எப்போது அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதோ, அப்போது இருந்தே அரசியல் நிகழ்வில் தென் படவில்லை.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டாரா ஜெயக்குமார், அல்லது அதிமுகவில் இருந்து விலகி இருக்கிறாரா ஜெயக்குமார் என்கிற பரபரப்புக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து பல்வேறு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு பின்பு ஜெயக்குமார் வாயிலாக பேட்டி கொடுக்க வைத்து பாஜக – அதிமுக கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.

2021 சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணமே பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் என்றும், ராயபுரம் தொகுதியில் முடி சூடா மன்னனாக இருந்த தான் தோல்வி அடைய காரணமே பாஜக உடன் கூட்டணி அமைத்தது தான் என பகிரங்கமாக பேசி இருந்த ஜெயக்குமார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்ய எடப்பாடி தலைமையிலான ஒரு அதிமுக குழு டெல்லி சென்ற போது அதில் ஜெயக்குமார் இடம் பெறவில்லை.
மேலும் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்த பின்பு இது வரை அந்த கூட்டணி குறித்து வாய் திறக்காமல் இருந்து வரும் ஜெயக்குமார் , அதிமுக சார்பாக நடக்கும் எந்த நிகழ்வுகளிலும் தென் படவில்லை. இந்நிலையில் அதிமுகவில் உயர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்த்த ஜெய்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது, மேலும் வரும் ஜூலை மாதம் நடைபெறும் ராஜசபா தேர்தலில் தனக்கு ராஜசபா சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து காய் நகர்த்தி வந்தார் ஜெயக்குமார்.
ஆனால் சென்னை, டெல்டா, மற்றும் தென்மாவட்டத்தில் மதுரைக்கு கீழே அதிமுக என்கிற கட்சி அட்ரஸ் இல்லாமல் சென்று விட்டது இனி என்ன செய்தாலும் தூக்கி நிறுத்த முடியாது என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, எங்கே அதிமுக செல்வாக்கு இருக்கிறதோ அந்த பகுதியில் உள்ள தலைவர்களுக்கு ராஜசபா சீட் கொடுத்து அதிமுக செல்வாக்கை தக்க வைப்போம் என முடிவு செய்து , முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைகழுவி விட்டார் எடப்பாடி என கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து கடும் அதிருப்தியில் ஜெயக்குமார் இருந்து வந்த தகவல் திமுக தலைமையின் கவனத்துக்கு சென்று இருக்கிறது. உடனே சென்னையில் உள்ள முக்கிய அமைச்சர் மூலம் ஜெய்குமாருக்கு தூது விட்டிருக்கிறது திமுக தலைமை. இதில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமார் வரும் 2026 சட்டசபை தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கி அமைச்சர் பதவி கொடுத்தால் திமுகவுக்கு வருவதற்கு தயார் என தெரிவித்ததாகவும், அதற்கு போட்டியிட சீட் உறுதி வெற்றி பெற்ற பின்பு அமைச்சர் பொறுப்பு குறித்து பேசிக்கலாம் என திமுக தரப்பில் தெரிவிக்க, அதற்கு ஜெயகுமார் பச்சை கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அதிமுக முக்கிய தலைவர்கள் தொடர்ந்து ஜெயக்குமார் உடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை சந்தித்து வந்துள்ளதாகவும், வரும் சட்டசபை தேர்தலில் ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்டால் நிச்சயம் தோல்வி தான் கிடைக்கும், அதனால் ராஜசபா சீட் வாங்கி கொள்வோம், என தனக்கு ராஜசபா சீட்டாவது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ஜெய்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதால் திமுக பக்கம் செல்ல தயாராக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

