உலக அளவில் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், நிலையான மற்றும் தொடர்ச்சியான மின்சார உற்பத்திக்கு அணு மின்சாரம் முக்கிய தீர்வாக இருக்கும் எதிர்காலத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்தியாவின் எதிர்கால மின்சார தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய சக்தி வளமாக அணுசக்தி உருவெடுத்து வருகிறது.
இந்தியாவில் தற்போது அணு மின்சாரம் மொத்த மின்சார உற்பத்தியில் குறைந்த அளவிலேயே பங்களித்து வருகிறது. இருப்பினும், எதிர்காலத்தில் இந்தப் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இப்படி தொலைநோக்கு திட்டத்துடன் இந்திய அணுசக்தித் துறையில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, கொண்டு வரப்பட்ட ‘ஷாந்தி மசோதா’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், இந்தியாவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும், கரிம உமிழ்வற்ற பசுமை ஆற்றலை நோக்கிய பயணத்தை வேகப்படுத்தவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் பங்களிப்பின் மூலம் நவீன அணுசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் சிறிய ரக அணு உலைகளை அமைப்பதில் இந்தியா உலக நாடுகளுடன் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடதக்கது. அணு மின்சாரத்தினால் ஏற்ப்படும் முக்கிய பலனாக கார்பன் உமிழ்வு குறைவு, அதிக அளவிலான மின்சார உற்பத்தி,நீண்ட காலத்திற்கு நிலையான மின்சாரத்தை வழங்குவது போன்றவை முக்கிய பலனாக இருக்கும்.
அதே நேரத்தில், அணு மின்சாரத் துறையில் சில சவால்களும் இருப்பதை மறுக்க முடியாது, அணு கழிவுகளை பாதுகாப்பாக கையாளுதல், அணு நிலையங்களின் பாதுகாப்பு, அதிக செலவினங்கள் என இது போன்ற சவால்களை சமாளிக்கும் வகையில் தன புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி , மேம்பட்ட அணு உலைகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உள்நாட்டு ஆராய்ச்சிக்கு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அணு மின்சாரத் துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதன் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மின்சார உற்பத்தி திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனியார் முதலீடு அனுமதிக்கப்பட்டாலும், அணுசக்தி பாதுகாப்பு மற்றும் கதிரியக்கக் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசின் கீழ் உள்ள அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் கண்காணிப்பிலேயே இருக்கும் என மத்திய அரசு உறுதி படுத்தி விட்டது.
அணு எரிபொருள் மேலாண்மை மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் சர்வதேசத் தரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் எவ்வித சமரசமுமின்றிப் பின்பற்றப்படும் எனவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரிக்கும் மின்சார தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்யும் வகையில் அணு மின்சாரம் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி படுத்தும் வகையில் அணு மின்சாரம் இந்தியாவின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறி வருகிறது. நாட்டின் மொத்த எரிசக்தி தேவையில் தற்போது 10 சதவீதம் அணுசக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில் , 2032-க்குள் 22 ஜிகா வாட், 2047-க்குள் 100 ஜிகா வாட் அணுசக்தி உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.




