2005ம் ஆண்டு தொடங்கியது முதலே திமுக அமைச்சர்கள் தொடர்ந்து அமலாக்க துறை சோதனையில் சிக்கி வருகிறார்கள், ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி, துரைமுருகன், கேஎன் நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
தற்போது தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனைகளை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் 2006-2011 காலகட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பான புகார்கள் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது அங்கு ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் இல்லை என அமலாக்க துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து யாரும் இல்லை என்றாலும் வீட்டை சோதனையிட வேண்டும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் கேட்டதற்கு அங்கிருந்தவர்கள் மறுத்துவிட்டனர்.
இதனை தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் அங்கேயே அதிகாரிகள் காத்திருந்தனர். பின்பு அமைச்சர் பெரியசாமியை தொடர்பு கொண்டு அனுமதி வழங்கியதும், அமலாக்க துறையினர் வீட்டின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வீட்டின் முழுவதும் சோதனை நடத்திய அமலாக்க துரை அதிகாரிகள், வீட்டின் மாடிக்கு சென்று சோதனையை மேற்கொண்டனர், அப்போது, மாடியில் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு இருந்தது.
அதிகாரிகள் அந்த அறையை சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த போது, இந்த அறைக்கு அமைச்சர் மற்றும் யாருமே போனது இல்லை என தெரிவிக்க, அதற்கு பரவாயில்லை யாரும் பயன்படுத்தாவிட்டாலும் அந்த அறையை சோதனை செய்ய வேண்டும் என அமலாக்க துறையினர் கேட்க, அதற்கு அங்கிருந்த காவலர்கள் மறுத்தனர். மேலும் தங்களிடம் சாவி இல்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து கதவின் பூட்டை உடைக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்து சுத்தியலுடன் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே ஐ. பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், தலைமைசெயலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து தலைமைசெயலகம் உள்ளே செல்லும் வழியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ பெரியசாமியின் அமைச்சர் அலுவலகத்திற்கு செல்லும் இடங்களும் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது. தலைமைசெயலகத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைய முடியாதபடி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமலாக்க துறை சோதனையில் இறுதியில் , அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது, ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் சுமார் 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என அமலாக்கதுறையினர் தெரிவித்து இருந்த நிலையில், தற்பொழுது நடைபெறும் சோதனையில் என்ன வெளியாகும் என பரபரப்பு நீடித்து வருகிறது.

