வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியில் நடித்து பிரபலமானதால் அவர் பரோட்டா சூரி என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன் சீமராஜா போன்ற படங்களில் சூரி நடித்ததால் மிக பிரபல நடிகராக மாறினார். தொடர்ந்து கிராமத்து படங்களில் காமெடி நடிப்பில் சூரியின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
பல முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சூரியை, இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் சூரி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். விடுதலை படம் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் அடுத்ததாக காமெடி நடிப்பில் இருந்து விலகி ஹீரோவாக மட்டுமே இனி நடிக்க வேண்டும் என்று நடிகர் சூரி முடிவு செய்தார்.

விடுதலை படத்தைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் சூரி நடித்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற படத்தில் சூரி நடித்தார். இந்த படம் கமர்சியலாக வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல விமர்சனத்தை பெற்றது. அடுத்து சூரி நடிப்பில் வெளியான மாமன் படம் மிகப்பெரிய வரவேற்பையும் ரசிகர்களின் பேராதரவையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விடுதலை கருடன் மாமன் என தொடர் வெற்றிப் படங்களை தந்ததால் நடிகர் சூரியை நாயகனாக வைத்து படம் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கை பல தயாரிப்பாளர்களுக்கும் வந்துள்ளது. இதற்கிடையே தனக்கு ஏற்ற நல்ல கதைகளை தேர்வு செய்து நடிகர் சூரி நடித்து வருகிறார். அடுத்ததாக மண்டாடி என்ற படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் நடிகர் சூரி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க முடிவு செய்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இனிமேல் அவர் நடிக்கும் படத்தை அவரே தயாரிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சூரியை வைத்து படம் எடுக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் நடிகர் சூரி சொல்லும் சம்பளத்தை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
முதலில் நாயகனாக நடிக்க ரூ.8 கோடி வரை சம்பளம் வாங்கிய நடிகர் சூரி இப்போது தனது சம்பளத்தை 15 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல தயாரிப்பாளர்கள் சூரியை வைத்து படம் தயாரிக்க முன்வராத நிலையில் தானே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தனது படங்களை தயாரிக்க நடிகர் சூரி திட்டமிட்டு இருக்கிறார்.
சூரியின் நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 100 கோடி ரூபாய் வரை கடனாளியாக மாறி இருக்கிறார். அவர் நடித்த பல படங்களில் சம்பளம் இல்லாமல் நடித்து அந்த கடனை அடைப்பதற்கே அவருக்கு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.இன்னும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடன் பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் கருடன் மாமன் என்ற இரண்டே இரண்டு ஹிட் படங்களை மட்டுமே கொடுத்திருக்கிற நடிகர் சூரி சம்பளத்தை 15 கோடி ரூபாயாக உயர்த்தியதுடன், தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பேர்தான் சொந்தக் காசிலேயே சூனியம் வைத்துக் கொள்வதா என்று ரசிகர்கள் சூரியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

