தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ஆம் ஆண்டு வாக்கிங் சென்றவர் , கை கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டாா். சுமார் 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தொடர்பாக போலீஸாா் விசாரணையில் குற்றவாளிகளைக் கண்டறிய முடியாததால், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கும் பின்னா் சிபிஐ-க்கும் மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் துப்புத் துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை இன்னும் நீண்டு வருகிறது. பல ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை.

இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ராஜாராம் ஆகியோரை உயர்நீதிமன்றம் விசாரணை அதிகாரிகளாக நியமித்தது.
குறிப்பாக திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த வழக்கு மீண்டும் சிபிசிஐடி-க்கு கடந்த 2021-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமாா் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் டிஐஜி வருண்குமார் தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று அங்கு அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதி சுடலைமுத்துவிடம் விசாரித்தனர்.
சுடலைமுத்து, திருநெல்வேலி சிப்காட் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டவர். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட காலக்கட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் தொழிற்பயிற்சிக்காக வந்திருந்தார். அப்போது ராமஜெயம் கொலை தொடர்பாக மற்றொரு கைதியுடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த முக்கிய தகவலின்பேரில் டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று, சுடலைமுத்துவிடம் 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் திருச்சி, நெல்லை, மதுரை, சென்னை புழல் உள்ளிட்ட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக டிஐஜி வருண்குமாா் திருச்சி பாலக்கரை பகுதியிலுள்ள திரையரங்கில் வியாழக்கிழமை இரவு விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, திரையரங்கின் உரிமையாளா் மற்றும் பணியாளா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. விசாரணை மேற்கொள்ளப்பட்ட திரையரங்கம், ராமஜெயம் கொலை செய்யப்பட்டபோது, சசிகலாவின் உறவினருக்கு சொந்தமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ராமஜெயத்தை கொலை செய்வதற்கு இந்தத் திரையரங்கில் வைத்து திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த திரையரங்கில் சுமார் 2 மணி நேர விசாரணைக்குப் பிறகு டிஐஜி வருண்குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கிருந்து சென்றனா். இந்நிலையில் இன்னும் 5 மாதத்தில் தேர்தல் வர இருக்கும் நிலையில், அதற்குள் ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கியே ஆக வேண்டும் என தீவிரம் காட்டி வரும் டிஐஜி வருண்குமாா் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் மிக விரைவில் தட்டி தூக்கி விடுவார் என கூறப்படுகிறது..

