தமிழக வெற்றி கழகத்துடன் தொடர்ந்து மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் தமிழகத்தை சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்கள். மேலும் காங்கிரஸ் கட்சியும் அதிக தொகுதி ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும், இல்லை என்றால் விஜய் உடன் கூட்டணிக்கு சென்று விடுவோம் என மறைமுகமாக திமுகவை மிரட்டி வந்தது காங்கிரஸ்.
ஆனால் பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததன் காரணமாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என கேட்டு வந்த பேர வலிமை குறையலாம் என்கிற சூழல் தமிழகத்தில் உருவானது. பீகார் தோல்வியால் தமிழக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான சீட்டுக்களை திமுக முன்பைவிட குறைக்கலாம் என்கிற பேச்சுகளும் கிளம்பின.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர், விஜய் கூட்டணிக்கு இணைவது போன்ற பல கருத்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் தவெக உடன் கூட்டணி என்கிற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விவாதங்கள் மேலும் தொடர்ந்தால் அது திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே பிரச்சனை அதிகரிக்கும் , பின்பு திமுகவே காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிடும் சூழல் உருவாகிவிடும் என இதற்கு முற்று புள்ளி வைக்க காங்கிரஸ் டெல்லி தலைமை முடிவு செய்தது.
மறுப்பக்கம் விஜய், தம்மை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி, ஆட்சியில் பங்கு அளிப்போம் என காங்கிரசுக்கு வலை விரித்து கொண்டிருந்தார், மேலும் நடிகர் விஜய் தரப்பிலும் காங்கிரஸ் தரப்பிக் சில தலைவர்களும் தவெக- காங்கிரஸ் ‘கூட்டணிக்கான’ சில முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் காங்கிரஸ் மேலிடம், திமுக கூட்டணியிலேயே நீடிக்க விரும்பியது. இருந்த போதும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும், விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கும், விஜய்யுடன் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் பல தகவல் வெளியானது. இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சிக்குள் திமுக கூட்டணியை விரும்பாத சிலரது ‘சித்து வேலைகளால்’ இத்தகைய வதந்திகள் பரப்பிவிடப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் அண்மையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போதும், திமுக கூட்டணியைத் தவிர வேறு எந்த ஒரு முயற்சியும் கிடையவே கிடையாது என காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்த பின்னணியில்தான், திமுகவுடன் மட்டுமே கூட்டணி என்பதை உறுதி செய்ய ‘தொகுதி பங்கீட்டுக்கான’ பேச்சுவார்த்தை குழுவை காங்கிரஸ் மேலிடம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ‘ஐந்து உறுப்பினர் குழு’ வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்.
‘இந்தியா கூட்டணி’ யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் பா சிதம்பரம். இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் வரும் என காத்திருந்த விஜயின் நிலைமை இலவு காத்த கிளி போன்று அமைந்துவிட்டது.

