திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இடை தேர்தல் தடை நீக்கப்பட்டு எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், அதை திமுகவுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் பிரச்சார வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் விஜய் தரப்பின் திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, திமுக ஆட்சியில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக முன்வைக்க வேண்டும் என்ற திட்டப்படி, சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகு திமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான விசாரணைகளையும், நடவடிக்கைகளையும் வேகப்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளாராம் முதல்வர் விஜய்.

ஆனால், விஜய் தரப்பின் அரசியல் திட்டம் ஒருபக்கம் இருக்க, தலைமைச் செயலாளர் சாய்குமார் கையில் இருப்பதாக சொல்லப்படும் ஆபரேஷன் முற்றிலும் வேறு ரூட்டில் செல்கிறது. தேர்தல் காலத்தில் தமிழக தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமிக்கப்பட்டார்.
1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சாய்குமார், இதற்கு முன்பு வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றியவர். மேலும், சாய்குமார் ஏற்கனவே பல்வேறு முக்கியமான நிர்வாகப் பொறுப்புகளை வகித்தவர். குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மைச் செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
ஆட்சி மாறிய பிறகு தலைமைச் செயலாளர் மாற்றப்படுவது வழக்கமான நிர்வாக நடவடிக்கையாக இருந்தாலும், சாய்குமாரை தொடர்ந்து அந்தப் பதவியில் வைத்திருக்க முதல்வர் விஜய் முடிவு செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அவரது பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாகத்தில் சாய்குமாருக்கு விஜய் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து சில தகவல் வெளியாகி உள்ளது.
சாய்குமார் தற்போது சில ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை திரட்டும் பணியில் கவனம் செலுத்தி வருவதாகவும், குறிப்பாக, திமுக ஆட்சிக்காலத்தில் முக்கியமான துறைகளில் பணியாற்றிய சில அதிகாரிகள், ஆட்சி மாறியதும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்களா? அவர்களின் துறைகளில் முக்கியமான நிர்வாக முறைகேடுகள் நடந்துள்ளதா?
அவர்களின் சொத்து மதிப்பில் ஏதேனும் அசாதாரணமான உயர்வு ஏற்பட்டுள்ளதா? அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் யார்? என்பது போன்ற தகவல்கள் ஆய்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக உளவுத்துறை மூலம் விரிவான தகவல்களை திரட்டும் முயற்சியும் நடைபெற்று வருகிறதாம்,
குறிப்பாக, ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும், அவர்களின் பதவிக்காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருபக்கம் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், இன்னொரு பக்கம் திமுக ஆட்சிக்காலத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள் தொடர்பான விசாரணைகள் என, தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடிகளுக்கு தயாராகி வருகிறதாம் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு.

