திருச்சியில் 135 அடி பெரியார் சிலை அருகில் 150 அடியில் தேவர் சிலை அமைக்க இடம் தேர்வு..! முக்குலத்தோர் அமைப்புகள் அதிரடி..

0
Follow on Google News

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் ” பெரியார் உலகம் ” என்ற பெயரில் பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம், மொத்தம் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைய இருக்கிறது, அந்த வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியவையும் அமைக்கப்படுவதற்கு தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வழங்கி இருந்தார்.

இந்நிலையில் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைய இருக்கும் அதே திருச்சி மாவட்டத்தில் 150 அடி உயரத்தில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைக்கும் பணியை முக்குலத்தோர் அமைப்புகள் தொடங்கியுள்ளது. இது குறித்து அனைத்து முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த தலைவர்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறார் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் ஜி.

இது குறித்து திருமாறன் ஜி அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது, இந்தியாவின் சுதந்திர தினம் கருப்பு தினம் என்றும், தொடர்ந்து ஆங்கிலேயனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு தமிழகத்தில் சிலை அமைக்கப்பட இருக்கும் நிலையில், சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களோடு இணைந்து ஆங்கிலேயனுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பசும்பொன் தேவர் அவர்களுக்கு திருச்சியில் அமைய இருக்கும் பெரியார் சிலையை விட உயரமாக சிலை அமைக்கப்படும்.

திருச்சியில் 150அடி உயரத்தில் பசும்பொன் தேவர் சிலை அமைய இருக்கும் வளாகத்தில் நூலகம், பொழுது போக்கு பூங்கா, பசும்பொன் தேவர் குறித்த அருங்காட்சியம் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம் பெற இருப்பதாக தெரிவித்த திருமாறன் ஜி, இதற்காக தொடர்ந்து முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தும், முக்குலத்தோர் அமைப்புகளை சந்தித்தும் பேசி வருவதாகவும், அனைவரும் அதற்கான ஆதரவை தெரிவித்து வருவதாக கூறினார்.

மேலும் திருச்சியில் தேவர் சிலை அமைய இருக்கும் இடத்தை தேர்வு செய்யும் பணிக்காக, இந்த வாரம் திருச்சி சென்று ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்த பின்பு, இடத்தை தேர்வு செய்யும் பணியை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். 150அடி உயரத்தில் அமைய இருக்கும் தேவர் சிலைக்கான செலவுகளை முக்குலத்தோர் அமைப்புகள் ஒன்றிணைத்து ஏற்று கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.