தமிழக கோயிலில் திருடப்பட்ட ராமர், சீதை, லட்சுமணன் வெண்கல சிலைகள் 42 ஆண்டுகளுக்குப்பின் லண்டனிலிருந்து மீட்பு.!

0

லண்டனிலிருந்து மீட்கப்பட்ட பகவான் ராமர், சீதை, லட்சுமணனின் வெண்கல சிலைகளை தமிழக அரசிடம், மத்திய கலாச்சார துறை அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் இன்று ஒப்படைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆனந்தமங்கலத்தில் உள்ளது ஸ்ரீ ராஜகோபால் விஷ்ணு கோயில். இந்த கோயில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. இங்கிருந்த பகவான் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் வெண்கல சிலைகள் கடந்த 1978-ஆம் ஆண்டு நவம்பர் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் திருடு போனது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் பிடிபட்டனர். ஆனால் சிலைகள் லண்டனுக்கு கடத்தப்பட்டதாக தெரியவந்தது. இது குறித்த தகவல் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் புகைப்பட ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டது. இந்த திருட்டு குறித்து லண்டன் காவல்துறையிடம், இந்திய தூதரகம் புகார் செய்தது. லண்டன் போலீசார் விசாரணை நடத்தி, லண்டனில் சிலைகளை வைத்திருந்த நபரிடம் இருந்து ராமர், சீதை, லட்சுமணன் சிலைகளை மீட்டு இந்திய தூதரகத்திடம் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி ஒப்படைத்தனர்.

இந்தியா கொண்டுவரப்பட்ட அந்த சிலைகளை, தமிழக அரசிடம் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு பிரகலத் சிங் பட்டேல் தில்லியில் இன்று ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை, மற்றும் தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்த பேட்டியளித்த மத்திய அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வெளிநாடுகளில் இருந்து இதுவரை 40-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்றார்.

இந்த சிலைகளை மீட்பதில் முக்கிய பங்காற்றிய இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ்நாடு காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை மத்திய அமைச்சர் பாராட்டினார்.தமிழக கோயிலில் திருடப்பட்ட சிலைகள் 42 ஆண்டுகளுக்குப்பின் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.