திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த நிலையில் முழுக்க முழுக்க தமிழ்நாட்டை டார்கெட் செய்து டெல்லி பாஜக தலைமை அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறது, அதன் வெளிப்பாடாகத்தான் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடிக்கடி தமிழ்நாடு பயணம் மேற்கொண்டு வருவதை வெளிப்படுத்துகிறது.
பாஜக கொங்கு மண்டலத்தில் மிக வலுவாக இருக்கிறது, அதேபோன்று தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்கின்ற பல்வேறு முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வரும் வகையில், அதில் ஒரு முயற்சியாக தான் தென் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சமூகத்தைச் சார்ந்த நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமித்தது பாஜக .

மேலும் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக பாஜக அறிவித்துள்ளது மேலும் கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் தென்மாவட்டம் கொங்கு மண்டலம் இந்த இரண்டையுமே வரும் சட்டசபை தேர்தலில் முழுமையாக அறுவடை செய்ய வேண்டும் என்கின்ற வியூகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வகுத்து வருகிறார்.
மேலும் தமிழக முழுவதும் சுமார் 60 தொகுதிகளை தேர்வு செய்துள்ள அமித்ஷாவின் குழுவினர், அதில் 35 தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தொகுதிகளை தேர்ந்தெடுப்பதிலும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதிலும் நேரடியாக அமித்ஷாவின் பார்வையின் கீழே நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனக்கு நம்பிக்கை கூறிய ஒரு தனியார் நிறுவனம் மூலம் தமிழ்நாடு முழுவதும் சர்வே ரிப்போர்ட் எடுத்து அதில் எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு உள்ளது, அதில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்கின்ற பல தகவல்களை தன்னுடைய குழுக்கள் மூலம் சேகரித்து உள்ளார் அமித்ஷா என்று கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டின் சென்னை மற்றும் எல்லையோர மாவட்டங்களில் பிற மொழி பேசக் கூடியவர்களுக்கு வேட்பாளராக வாய்ப்புகளை வழங்கலாம் என்றும், அதே நேரத்தில் தென் மாவட்டங்கள், கொங்கு மண்டலங்கள், மத்திய மண்டலங்கள் டெல்டா போன்றவற்றில் அங்கே பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சமூகத்திற்கு பாஜகவில் வேட்பாளராக களம் இறக்கினால் மட்டுமே பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்கின்ற ரிப்போர்ட் அமித்ஷாவிற்கு சென்றிருக்கிறது.
மேலும் ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை முடிவு செய்யக்கூடிய ஒரு பெரும்பான்மை சமூகத்தினருக்கு அங்கே போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால், அது அந்த சமுதாயத்திற்கு எதிரானதாக அமைந்து விடும், அந்த வகையில் இரண்டு திராவிட கட்சிகளும் கடந்த காலங்களில் இதை மிக சாதுரியமாக கையாண்டு கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்களில், வட மாவட்டங்களிலும் மிகக் கவனமாக வேட்பாளர்களை தேர்வு செய்து வந்ததையும் அமித்ஷா குழுவினர் அமித்ஷாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு பக்கம் பாஜக வெற்றி பெறுவதற்காக அரசியல் நகர்வுகளை அமித்ஷா நகர்த்தி வந்தாலும், மறுபக்கம் திமுகவை பலவீனம் அடையச் செய்ய வேலைகளிலும் செய்து வருவதை பார்க்க முடிகிறது, அந்த வகையில் பீகார் சட்டசபை தேர்தல் முடிந்ததும் திமுகவுக்கு எதிரான அமலாக்க துறை ரெய்டு, மிக உச்ச கட்டத்தை எட்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

