25 வயது இளம் பெண் எம் எல் ஏ… யார் இந்த மைதிலி தாக்குர்… எந்த அரசியல் பின்புலமும் இல்லை…

0
Follow on Google News

பீஹாரின் மதுபானி மாவட்டம், பெனிபட்டியில் 2000ஆம் ஆண்டு பிறந்த மைதிலி தாக்குர் சிறு வயதிலேயே இசைத்துறையில் தனியிடம் பிடித்துவிட்டார். பாரம்பரிய கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். நாட்டுப்புற இசையை தந்தையிடம் இருந்தும் தாத்தாவிடம் இருந்தும் கற்றார். பள்ளிப் படிப்பை தில்லியில் முடித்தார். பத்து வயதுச் சிறுமியாக இருந்த போதே, பள்ளியில் அனைவரையும் கவர்ந்தவர்.

தில்லி பல்கலை.க்கு உட்பட்ட ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் 2022ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தார். அப்போது, 2021ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதை வென்றவர். பேஸ்புக், யூடியூப் மூலம் தமது இசைத் திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். 2020ல் இவர் தமிழில் பாடிய கண்ணான கண்ணே பாடலை இன்றும் சமூகத் தளங்களில் தமிழ் இசை ஆர்வலர்கள் பார்த்து மெய்சிலிர்த்து பாராட்டியிருக்கிறார்கள்.

குடும்பத்தின் வறுமையான சூழல் இவருக்கு இசைத் துறையில் தீவிரமாக ஈடுபட தீவிர உந்துசக்தியாக இருந்தது. இவரது திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கின. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து மைதிலி குறுகிய காலத்திலேயே சோசியல் மீடியா பிரபலமாக உருவெடுத்தார்

நாட்டுப்புற பாடகியாக அறியப்படும் அவர், கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி தனது 25வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அடுத்த 3 மாதங்களில் வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவேன் என அறிவித்தார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. காரணம் அப்போது அவர் பாஜகவில் இணையவில்லை.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி பிஹார் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அலிநகர் தொகுதியில் பாடகி மைதிலி தாகூருக்கு சீட் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருநாள் முன்னர் தான் அவர் தன்னை பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். கட்சியில் சேர்ந்த ஒருநாளில் அவருக்கு எம்.எல்.ஏ. சீட் வழங்கப்பட்டது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில், மைதிலி திறமை மற்றும் புகழுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக பாஜக அலிநகர் தொகுதி வேட்பாளராக களமிறக்கியது. இந்த அலிநகர் தொகுதியில் 2008ம் ஆண்டு முதலே எதிர்க்கட்சிகளின் மகா கூட்ணியின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய சவாலான தொகுதியில் 25 வயதேயான மைதிலியை பாஜக களமிறக்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இன்று தேர்தல் முடிவுகளை வெளியான நிலையில், தொடக்கம் முதலே முன்னிலை வகித்த மைதிலி தாக்கூர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆர்.ஜே.டி. வேட்பாளர் பினோத் மிஸ்ராவை விட 11,730 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். இதன்மூலம், பீகாரின் மிக இளம் வயது எம்.எல்.ஏ. என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மைதிலி, ‘ச ரி க ம ப லிட்டில் சாம்பியன்ஸ்’ மற்றும் ‘இந்தியன் ஐடல் ஜூனியர்’ போன்ற பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் முதலில் நிராகரிக்கப்பட்டார். ஆனாலும், அவர் மனம் தளராமல் முயற்சி செய்தார். 2017 ஆம் ஆண்டில், ‘ரைசிங் ஸ்டார்’ நிகழ்ச்சியில் முதல் ரன்னர்-அப் ஆக வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாவர் ஒரு பெரிய ஆன்லைன் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.