அமைச்சர் கே.என். நேரு நகராட்சி நிருவாகத் துறையில் ஒப்பந்தங்களுக்கு லஞ்சம், வேலைவாய்ப்புகளுக்கு லஞ்சம் என ரூ. 1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை, தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி இதுதொடர்பான ஆதாரங்கள் அடங்கிய 252 பக்க அறிக்கையையும் அனுப்பியுள்ளது.இதன் அடிப்படையில் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
உள்ளாட்சியில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து ‘கட்சி நிதி’ என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கூடுதலாக, துறையில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள்கூட ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சம் வசூலித்து அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறியுள்ளர்.

அமைச்சரின் உதவியாளர்களின் தொலைபேசிகளிலிருந்து கைப்பற்றப்பட்டதாக உரையாடல்கள் மற்றும் மற்ற ஆதாரங்கள் அடிப்படையில், ரூ. 1,020 கோடி மொத்த லஞ்சப் பணம் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆதாரமாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த லஞ்சப் பணம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஹவாலா நெட்வொர்க் மூலம் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் உரிமையாளராக உள்ள ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (True Value Homes) சம்பந்தப்பட்ட சி.பி.ஐ வங்கி மோசடி தொடர்பான பண மோசடி வழக்கை விசாரிக்கும் போது, ஏப்ரல் மாதம் நேரு மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான சோதனையின் போது டிஜிட்டல் சாதனங்களில் இந்த ஆதாரங்களை அமலாக்கத்துறை கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளது.
கழிவறைகள், துப்புரவுத் தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்தல், துப்புரவாளர் குடியிருப்புகள், கிராமச் சாலைகள், நீர்/ஏரிப் பணிகள் போன்ற கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது அமலாக்கத்துறை. ஏற்கனவே கடந்த அக்டோபர் 27 அன்று, உள்ளாட்சித் துறையில் நடந்த பணிக்காகப் பணம் மோசடி குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி, அமலாக்கத்துறை, காவல்துறை டிஜிபி-க்கு கடிதம் எழுதியிருந்தது.
அந்தக் கடிதத்தில், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடல் அதிகாரிகள் போன்ற பதவிகளைப் பெற ஒரு நபருக்கு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.அதைத்தொடர்ந்து இரண்டாவது கடிதமும் எழுதியுள்ளது. அதில், மேலும் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
ஆடம்பரமான வாழ்க்கை முறை, தனிப்பட்ட சொத்துக்கள் உருவாக்கம் மற்றும் அரசியல் செலவினங்களுக்காக பொது நிதி சுரண்டப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத் துறை, விஜய் மதன்லால் சௌத்ரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்ட ஊழலை விசாரிக்க வழக்குகள் பதிவு செய்யுமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது,
இதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருப்பது, லஞ்சப் பணம் வசூலிப்பதில் குற்றவாளிக்குத் தெரிந்தே உதவுவதற்குச் சமம் என்று மாநில காவல்துறைக்குத் தெளிவான எச்சரிக்கையும் விடுத்துள்ளது அமலாக்க துறை.

