தமிழில் மட்டுமின்றி இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் எஸ்பிபி. பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் பேசியிருக்கிறார். குறிப்பாக கமல் நடித்த தெலுங்கு படங்களுக்கு பின்னணி பேசியவர் எஸ்பிபி தான். பாடகர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் நடிகர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இந்நிலையில் பிரபல பாடகர் மனோ, எஸ் பி பி குறித்து மனம் திறந்து பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எஸ்பி பாலசுப்ரமணியம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி கின்னஸ் உலக சாதனை படைத்தவர். தனது வசீகரமான குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ் பி பி சரண் நடிகர் தயாரிப்பாளர் மற்றும் பாடகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். எஸ்பிபியின் தம்பி என்று அழைக்கப்பட்டவர் பாடகர் மனோ. இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை மனோ பாடியிருக்கிறார்.

அவரது காந்த குரல் ரசிகர்களை வெகுவாக வசீகரித்து இருக்கிறது. எஸ்பிபி – மனோ இடையே ஒரு அண்ணன் தம்பி பாசம் இருந்திருக்கிறது. பாடகர் மனோவுக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் ஒரு வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருந்திருக்கிறார். பின்னணி பாடகர் மனோவின் மகன் துருவன் மனோ வட்டக்கானல் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடந்தது.
இதில் கலந்துகொண்ட பாடகர் மனோ, பாடகர் எஸ்பிபி குறித்து கூறியதாவது, என்னுடைய அண்ணன் எஸ்பிபி மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை கூட அவரிடம் பகிர்ந்து இருக்கிறேன். ஒருமுறை என்னுடைய மகன்களின் சினிமா ஆர்வம் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு பையன் படம் பண்ணா ஆசைப்படறான். இன்னொரு பையன் பாடகராக ஆசைப்படறான்னு சொன்னேன்.
அதுக்கு அவர், டேய் நம்ம ஆசைப்படுவது எல்லாம் நமக்கு நடந்தால் நாம தான் கடவுள். நம்மகிட்ட என்னென்ன இருக்கோ அதை வச்சு பசங்க முன்னேற வழி பண்ணு. அதுக்கு எடுத்துக்காட்டாக என்னையே எடுத்துக்கோ. என் மகன் படம் தயாரித்து நஷ்டமானதால் அந்த கடனுக்கு நான் பாட்டு பாடி வட்டி கட்டி அடைத்தேன். அதனால அப்படி நீ போயிடாத. ஏன்னா நம்ம ஒவ்வொரு படியா கஷ்டப்பட்டு 45 வருஷம் டிராவல் பண்ணி வந்திருக்கோம்.
ஒரு பாட்டை நீ பாடினால் தான் காசு. உனக்கு சளி பிடித்து இருக்குதுன்னு உன் பையனை பாட சொன்னால் ஒத்துக்க மாட்டாங்க. அதனால ஒரு பாடகனுக்குரிய காசு மதிப்பு மிக்கது என்று எஸ்பிபி அண்ணன் எனக்கு அறிவுரை சொன்னார் என்று அந்த செய்தியாளர் சந்திப்பின் போது பாடகர் மனோ, பாடகர் எஸ்பிபி குறித்து பேசியிருக்கிறார். சமகால பாடகராக மட்டுமின்றி ஒரு சகோதரராக எஸ்பிபி, மனோவிடம் அன்பு காட்டியிருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
தனது மகன் எஸ்பிபி சரண் திரைப்படத் தயாரிப்பில் நஷ்டம் அடைந்தபோது அந்த கடனை அடைப்பதற்காக எஸ்பிபி பல படங்களில் பாட்டு பாடி வட்டி கட்டி இருக்கிறார் என்பது தனது அன்பு மகனுக்காக எஸ்பிபி செய்த பெரும் தியாகத்தை உணர்த்துகிறது. மேலும் இளைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டியாக அவர் இருந்திருக்கிறார் என்பதும் மனோவுக்கு அவர் கூறிய அறிவுரை மூலம் தெளிவாகிறது. பின்னணி பாடகராக மட்டுமின்றி பாசமிகு தந்தையாக, நட்புக்கு நல்ல ஆலோசகராக எஸ்பிபி வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்பதை பாடகர் மனோ உறுதிபடுத்தி இருக்கிறார்.

